பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய 8 பெண்களுக்கு ரூ.3¼ லட்சம் காசோலை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்

முதல்–அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய 8 பெண்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 172 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பெண் சிசுகொலையை தடுத்து, பெண் கல்வியை ஊக்கப்படுத்த

Update: 2016-12-31 23:00 GMT

கடலூர்,

முதல்–அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய 8 பெண்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 172 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

பெண் சிசுகொலையை தடுத்து, பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தற்போது முதல்–அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய ஒரு பெண் குழந்தைக்கான வைப்புத்தொகை ரூ.50 ஆயிரமாகவும், 2 பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகை தலா ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடத்துக்கும் வட்டி விகிதாச்சார அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு 18 வயது நிரம்பிய உடன் முதிர்வுதொகை காசோலையாக வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 வயது நிரம்பிய 8 பெண்களுக்கு காசோலை வழங்கும் விழா கடலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ரூ.3¼ லட்சம் காசோலை

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் உளுதூர் கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரிக்கு ரூ.41 ஆயிரத்து 881, கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த கலையரசிக்கு ரூ.38 ஆயிரத்து 121, கரையேறவிட்டக்குப்பத்தை சேர்ந்த நக்மாவுக்கு ரூ.42 ஆயிரத்து 582, திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த காயத்திரிக்கு ரூ.59 ஆயிரத்து 223, ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த அமராவதிக்கு ரூ.60 ஆயிரத்து 260, பண்ருட்டி கணபதி நகரை சேர்ந்த கீதாவுக்கு ரூ.24 ஆயிரத்து 580, திருவாமூரை சேர்ந்த பூஜாவுக்கு ரூ.35 ஆயிரத்து 362, ஆயிப்பேட்டையை சேர்ந்த சூரியாவுக்கு ரூ.28 ஆயிரத்து 163 என மொத்தம் 8 பெண்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 172 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்.

இதில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாதவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவஹர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, சமூகநல அலுவலர் மீனா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்