செம்மரக்கட்டை இடைத்தரகரை கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

செம்மரக்கட்டை இடைத்தரகரை கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார். இடைத்தரகர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பகுதி இளைஞர்கள் உள்பட;

Update: 2016-12-31 23:00 GMT

திருவண்ணாமலை,

செம்மரக்கட்டை இடைத்தரகரை கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார்.

இடைத்தரகர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பகுதி இளைஞர்கள் உள்பட வேலையில்லாத தொழிலாளர்கள் பலரை இடைத்தரர்கள் பணம் கொடுத்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். இவ்வாறாக செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களை ஆந்திர வனத்துறையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரம் கடத்தச்சென்றதாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர்.

எனவே வேலையில்லாத தொழிலாளர்களிடம் அவர்களின் வறுமையை பயன்படுத்தி முன்பணம் கொடுத்து செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் இடைத்தரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிப்படை ஒன்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஏற்படுத்தினார்.

அதில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி என்கிற புகழ், ஆரணி தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். தனிப்படை போலீசார் செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் குறித்த பெயர் விவரங்களை சேகரித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

கைது செய்யாமல் இருக்க...

கண்ணமங்கலம் அருகேயுள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக செம்மரம் வெட்ட ஆள் சேர்க்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து சமீப காலமாக இடைத்தரகர் தொழிலை விட்டு வேறு தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் புகழ், சப்–இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் மதன் வீட்டிற்கு சென்றுள்ளனர். மதனை போலீசார் தனியாக அழைத்து சென்று, ‘‘செம்மரம் வெட்ட ஆட்கள் சேர்க்கும் இடைத்தரகர்கள் பட்டியலில் உன் பெயர் உள்ளது. செம்மரம் வெட்ட ஆட்களை சேர்த்து விட்டது தொடர்பாக உன்னை கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சம் தர வேண்டும்’’ என்று கேட்டுள்ளனர்.

அப்போது மதன் ‘‘தற்போது என்னிடம் ரூ.6 லட்சம் இல்லை. எனவே முன்பணமாக ரூ.1 லட்சம் வைத்து கொள்ளும்படியும், இன்னும் சில நாட்களில் மீதமுள்ள ரூ.5 லட்சத்தை தருகிறேன்’’ என்றும் கூறி உள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து வந்து போலீசாரிடம் கொடுத்துள்ளார். அப்போது மதன் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த காரை எடுத்து சென்று ஆரணியில் உள்ள அவரின் உறவினர் வீட்டின் முன்பாக சப்–இன்ஸ்பெக்டர் கணபதி நிறுத்தியதாவும், மீதமுள்ள ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து காரை எடுத்து செல் என்று மதனிடம் கூறியதாகவும் தெரிகிறது.

ஐ.ஜி.யிடம் புகார்

அதைத்தொடர்ந்து போலீசார் இருவரும் செல்போனில் மீதமுள்ள ரூ.5 லட்சத்தை உடனடியாக தரும்படி மதனை மிரட்டி உள்ளனர். தனக்கும் போலீசாருக்கும் இடையே செல்போனில் நடைபெற்ற உரையாடலை மதன் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அதனை மதன் ஆதாரமாக கொண்டு வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைகண்ணனிடம் புகார் அளித்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோருக்கு ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் புகழ், சப்–இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் மதனை கைது செய்யாமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு, ரூ.1 லட்சம் பெற்றதும், மீதமுள்ள ரூ.5 லட்சத்திற்காக மதன் காரை அவர்கள் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் உத்தரவின்படி, டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழ், சப்–இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார்.

வேலியே பயிரை மேய்ந்ததுபோல் செம்மரக்கட்டை இடைத்தரகர்களை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோரே லஞ்சம் கேட்ட சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்