பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டு கொண்டாடுங்கள் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டை கொண்டாடுங்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு பிரசுரங்கள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்
காஞ்சீபுரம்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டை கொண்டாடுங்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு பிரசுரங்கள்காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3,451 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 1,032 பேர் இறந்துள்ளனர். 3,545 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்களும், காயங்களும் சாலை விதிகளை கடைபிடிக்காததால்தான் ஏற்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை சார்பில் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் சம்பந்தமான விழிப்புணர்வு பிரசுரங்கள் அவ்வப்போது மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
295 தடுப்புகள்வருகிற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துக்கள் ஏற்படா வண்ணம் காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தாண்டையொட்டி இன்று (சனிக்கிழமை) இரவு காஞ்சீபுரம் மாவட்டத்தின் வழியாக செல்லும் ஜி.எஸ்.டி. தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் நெடுஞ்சாலை போன்ற மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அனைத்துவித சாலைகளிலும் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 295 தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்தில்லா தினமாகவும், விபத்தில்லா ஆண்டாகவும் அமைய ஏதுவாக வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புத்தாண்டு கொண்டாடுங்கள் என்று போலீஸ்துறை மூலமாக கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) இரவு திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கிடையாது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாசாரத்தை சீரழிக்கும் விதத்தில் ஆபாசமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆடல், பாடல்கள் நடத்த அனுமதி கிடையாது. மேலும் நள்ளிரவு நேரத்தில் வாகனங்களில் வேகமாக சென்று பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்க கூடாது.
அதிக ஒலியுடன் இசைக்கருவி மற்றும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.