மோட்டார் சைக்கிளில் சென்ற போது ‘செக்போஸ்ட்’ கயிறு, கழுத்தில் இறுக்கியதால் வாலிபர் பரிதாப சாவு

மோட்டார் சைக்கிளில் சென்ற போது கழுத்தில் இறுக்கியதால் வாலிபர் பரிதாபமாக இறந்தார். தனியார் ஆஸ்பத்திரி காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பகுதியை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 35). துரைபாபு பல ஆண்டு காலமாக அந்த பகுதியில

Update: 2016-12-31 00:03 GMT

திருப்போரூர்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது கழுத்தில் இறுக்கியதால் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தனியார் ஆஸ்பத்திரி

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பகுதியை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 35). துரைபாபு பல ஆண்டு காலமாக அந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் செய்தித்தாள்கள் வினியோகம் செய்யும் பணியை செய்து வந்தார். அவருடன் அவரது மகன் கவுரிசங்கரும் அந்த பணியை செய்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் பணியில் இருந்த கவுரிசங்கர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செய்தித்தாள்களை வினியோகம் செய்வதற்காக சென்றார். அப்போது ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு அருகே ‘செக் போஸ்ட்’ சரிவர வேலை செய்யாமல் அதன் கம்பி மேல் நோக்கிய நிலையில் இருந்தது.

கழுத்தில் கயிறு இறுக்கியது

அந்த வழியாக சென்ற கவுரிசங்கர் செய்தித்தாளை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் செக்போஸ்டின் குறுக்கே கயிறு கட்டி வைத்தார்.

இதனை கவனிக்காமல் கவுரிசங்கர் மோட்டார் சைக்கிளில் அதே வழியில் வந்து கொண்டிருந்தார். அப்போது செக்போஸ்டில் கட்டி வைத்திருந்த கயிறு அவரது கழுத்தில் இறுக்கி தூக்கி வீசப்பட்டார்.

பரிதாப சாவு

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உயிருக்கு போராடிய கவுரிசங்கரை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். காவலாளிகள் அளித்த தகவலின்பேரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கவுரிசங்கர் ‘செக்போஸ்ட்’ வழியாக சென்றபோது கயிறு இல்லாததால் திரும்பி வரும்போதும் தடுப்பு இருக்காது என்று நினைத்து வந்துள்ளார். ஆனால் அதில் ஊழியர் ஒருவர் கட்டிய கயிறு அவரது உயிரை பறித்துவிட்டது. பலியான கவுரிசங்கருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். கவுரிசங்கர் இறந்த சம்பவத்தை கேள்விபட்ட அவரது தாயார் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலை மறியல்

கவுரிசங்கரின் மரணம் குறித்து சரியான விளக்கம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஆஸ்பத்திரி எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கவுரிசங்கரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.


மேலும் செய்திகள்