பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வியாபாரிடம் லஞ்சம் வாங்கிய சிக்கமகளூரு நகரசபை கமி‌ஷனர் உள்பட 2 பேர் கைது

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய சிக்கமகளூரு நகரசபை கமி‌ஷனர் உள்பட 2 பேரை ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய... சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராம செட்டி. வியாபாரி

Update: 2016-12-30 22:12 GMT

சிக்கமகளூரு

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய சிக்கமகளூரு நகரசபை கமி‌ஷனர் உள்பட 2 பேரை ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய...

சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராம செட்டி. வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்ற செய்வதற்காக சிக்கமகளூரு நகரசபைக்கு சென்றார். அங்கு அவர், நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத்தை சந்தித்து, பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது குறித்து மனு கொடுத்துள்ளார். அப்போது, நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முதலில் மறுத்த கோதண்டராம செட்டி, பின்னர் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டார். முதற்கட்டமாக ரூ.16 ஆயிரத்தை நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத்தின் உதவியாளர் ஹரீஷ் என்பவரிடம் கோதண்டராம செட்டி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை 2 நாட்கள் கழித்து தருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து கோதண்டராம செட்டி, ஊழல் தடுப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் புகார் கொடுத்துள்ளார். அவருடைய அறிவுரையின்பேரில் கோதண்டராம செட்டி, நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத்தை தொடர்பு கொண்டு தன்னிடம் ரூ.2 ஆயிரம் தான் உள்ளது. அதனால் லஞ்சப்பணத்தில் ரூ.2 ஆயிரம் குறைத்துக் கொள்ளும்படி கோரியுள்ளார். இதற்கு சிவபிரசாத்தும் ஒப்புக் கொண்டார்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு படையினர் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு கோதண்டராம செட்டி சிக்கமகளூரு நகரசபைக்கு சென்றார். நகரசபை வளாகத்தில் வைத்து அவர் ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை சிவபிரசாத்தின் உதவியாளர் ஹரீசிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை ஹரீஷ் வாங்கிக்கொண்டார். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்பு படை போலீசார், ஹரீசை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத் கூறியதன் பேரில் கோதண்டராம செட்டியிடம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஊழல் தடுப்பு படை போலீசார் நகரசபை கமி‌ஷனர் சிவபிரசாத் மற்றும் அவருடைய உதவியாளர் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்