பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் தகவல்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார். குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மா

Update: 2016-12-30 22:30 GMT
திண்டுக்கல்,

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது. ஆனால் முதலில் விவசாயிகள் மொத்த தொகையையும் கொடுத்து கருவிகள் வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனை மாற்றி மானியம் போக மீதி தொகையை மட்டும் செலுத்தி கருவிகள் வாங்க அனுமதிக்க வேண்டும்.

காப்பீட்டு தொகை

மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து, ஏராளமான விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைத்திருந்தோம். ஆனால் தண்ணீர் இல்லாததால் அனைத்தும் கருகிவிட்டன. மேலும் 1000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணை நீண்ட காலத்திற்கு பின்னர் வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி அணையை உடனடியாக தூர்வார வேண்டும்.

மானூர் அருகே ஏராளமான குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. எனவே இவற்றை அகற்ற வேண்டும். இதேபோல கால்வாய்களை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபர் மாதத்திற்கு பின்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பு பயிரிடப்பட்டிருந்த கரும்பு உள்பட ஏராளமான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துவிட்டன. எனவே அவற்றிற்கும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அணை தூர்வாரப்படும்

விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதிலளித்து பேசியதாவது:-

மானியத்தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க, விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்கூட்டியே வழங்குமாறு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் நாற்றங்கால் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு, நிவாரண உதவி வழங்க பரிசீலனை செய்யப்படும்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையை தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து மண்ணை அள்ளி வெளியே கொண்டு வர பாதை இல்லை. எனவே வனத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து பாதை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 2-வது வாரத்தில் அணை தூர்வாரப்படும். இதேபோல குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

அக்டோபர் மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கும் காப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீமைக்கருவேல மரம்

இதைத்தொடர்ந்து கலெக்டர் டி.ஜி.வினய் பேசும்போது, ஐகோர்ட்டு உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுமாறு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த நில உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அகற்றவில்லை என்றால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்றிவிட்டு அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்