தலைமறைவாக இருந்த கொள்ளையன் நீராவி முருகன், கூட்டாளியுடன் கைது போலீசிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்ததால் படுகாயம்

தலைமறைவாக இருந்து வந்த கொள்ளையன் நீராவி முருகன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். போலீசிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்ததால் நீராவி முருகன் படுகாயம் அடைந்தார். கொள்ளையன் சென்னை போலீசாருக்கு மிகுந்த சவாலாக விளங்கி வந்தவர் கொள்ளையன் நீராவ

Update: 2016-12-30 23:00 GMT

பூந்தமல்லி,

தலைமறைவாக இருந்து வந்த கொள்ளையன் நீராவி முருகன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். போலீசிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்ததால் நீராவி முருகன் படுகாயம் அடைந்தார்.

கொள்ளையன்

சென்னை போலீசாருக்கு மிகுந்த சவாலாக விளங்கி வந்தவர் கொள்ளையன் நீராவி முருகன் (வயது 36). தூத்துக்குடியை சேர்ந்த இவர் மீது 45–க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

2014–ம் ஆண்டு நீராவி முருகன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்தார். அந்த வழக்கில் கைதாகி வெளியே வந்த நீராவி முருகன் பின்னர் தலைமறைவானார். பின்னர் சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்.

இதனால் நீராவி முருகனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் நோட்டீஸ் ஒட்டி அவரை தேடி வந்தனர்.

வீடு புகுந்து திருட்டு

கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் துரைசிங்கம் வீட்டுக்குள் டி.வி. மெக்கானிக் என்று கூறி புகுந்த 2 பேர், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் 10 பவுன் நகை, டி.வி.யை திருடிச்சென்றனர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையர்களில் ஒருவர் நீராவி முருகன் என தெரியவந்தது.

எனவே அவரை பிடிக்க வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், அசோக் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விரட்டிச்சென்றனர்

இந்நிலையில் தாம்பரம்–மதுரவாயல் புறவழிச்சாலையில் நீராவி முருகன் தன் கூட்டாளி சக்திவேலுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் வாகன சோதனை நடத்தி நீராவி முருகன் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கினர்.

ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் காரில், அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச்சென்றனர்.

கூட்டாளியுடன் கைது

போரூர் ஏரி மேம்பாலத்தில் சென்றபோது நீராவி முருகன், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போலீசிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்து எழுந்து ஓட முடியாமல் துடித்தார்.

உடனே போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருடன் வந்த சக்திவேலும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–

பிடிப்பதில் சிக்கல்

நீராவி முருகன் செல்போனை உபயோகப்படுத்தாமல் இருந்ததால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அவருடைய கூட்டாளிகளில் யாராவது ஒருவரை பிடித்து அவர் மூலம் நீராவி முருகனை செல்போன் மூலம் பேச வைக்க முடிவு செய்தோம்.

அதன்படி அவருடைய கூட்டாளியை பிடித்து நீராவி முருகனுக்கு வலை விரித்தோம். ஆனால் அவர் கடைகளில் உள்ள 1 ரூபாய் நாணயம் போட்டு பேசும் டெலிபோனில் பேசினார். இதனால் அவரை உடனடியாக பிடிக்க முடியவில்லை. ஆந்திராவில் நீராவி முருகனின் காதலி வீடு உள்ளது. எனவே அங்கு சென்றபோது போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பிச்சென்றார்.

உல்லாச வாழ்க்கை

நீராவி முருகன் சிறு வயதில் முடி வெட்டும் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த கடையில் திருடியதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அவர் அங்கு ஏற்பட்ட சிலரின் தொடர்பால் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி அதில் சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். தான் கொள்ளையடிக்கும் பணத்தில் ஆடம்பர செலவு செய்து உல்லாசமாக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

தற்போது கைதான நீராவி முருகன், சக்திவேல் ஆகியோரிடம் இருந்து 32 பவுன் நகைகள், 7 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு போலீசார் கூறினர்.

 2–வது முறையாக எலும்பு முறிவு

கடந்த 2014–ம் ஆண்டு துரைப்பாக்கம் பகுதியில் ஆசிரியையிடம் நகையை பறித்த வழக்கில் நீராவி முருகனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

தற்போது 2–வது முறையாக போலீசார் அவரை விரட்டிச்சென்ற போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்