செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது

செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2016-12-30 20:45 GMT
செங்கோட்டை,

செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவுப்படி, செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செங்கோட்டை வனத்துறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஜீப் மற்றும் ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று ஜீப், ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

அதனை சோதனை செய்ததில், 10 மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

ஜீப்–ஆட்டோவுடன் புகையிலை பறிமுதல்

இதுதொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கழுதுருட்டி ஊரைச் சேர்ந்த தர்மர் மகன் சேகர் (வயது 25), செங்கோட்டை மேலூர் கதிரவன் காலனியை சேர்ந்த வெள்ளையன் மகன் மாரிராஜா (32) என்பதும், அவர்கள் செங்கோட்டையில் இருந்து போதை புகையிலை மூடைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட போதை புகையிலை மூடைகளுடன் ஜீப், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், மாரிராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்