தூத்துக்குடியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 18 கிட்டங்கிகளுக்கு சீல் வைப்பு உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட 18 கிட்டங்கிகளுக்கு உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

Update: 2016-12-30 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட 18 கிட்டங்கிகளுக்கு உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

77 கட்டிடங்கள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முறையான அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்டிடங்கள் குறித்து உள்ளூர் திட்டக்குழுமம் அறிக்கை கொடுத்தது. அதன்படி மாநகராட்சி பகுதிக்குள் 77 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் முதல் கட்டமாக கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணையை மீறுதல், கட்டிடத்தின் அருகே 9 மீட்டர் அகல அணுகுசாலை, திறந்தவெளி ஆகிய 3–ம் இல்லாத கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

சீல் வைப்பு

அதன்படி உள்ளூர் திட்டக்குழுமத்திடம் திட்ட அனுமதி பெறாமலும், வளர்ச்சிக்கட்டுப்பாட்டு விதிகள் பாதிக்கும் வகையிலும், அரசுக்கு உட்கட்டமைப்பு அடிப்படை வசதி கட்டணம் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டு இருந்த 27 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நேற்று நடந்தது.

உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் ராமச்சந்திரன், தாசில்தார் சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர். உப்பாற்று ஓடை அருகே உள்ள கிட்டங்கிகள், காதர் மீரான்நகர் பகுதியில் உள்ள கிட்டங்கிகள் என, ஆக மொத்தம் 18 கிட்டங்கிகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த கிட்டங்கிகள் முன்பு சீல் வைக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஒட்டினர். தொடர்ந்து விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்