அரசு போக்குவரத்து கழக சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்

அரசு போக்குவரத்து கழக சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் தொ.மு.ச. மண்டல பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2016-12-29 23:00 GMT
திருச்சி,

அரசு போக்குவரத்து கழக சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று தொ.மு.ச. மண்டல பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மத்திய சங்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மத்திய சங்க செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். தொ.மு.ச. பேரவை செயலாளர் பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை

1-9-2015 முதல் வழங்கவேண்டிய சம்பள உயர்வு வழங்காததை கண்டிப்பது. சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 12-வது ஊதிய ஒப்பந்தப்படி அகவிலைப்படியை அரசு அறிவித்த அன்றைய மாதமே வழங்கிடவும் 2016-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கவேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கும்படியும் கேட்டுக்கொள்வது.

ஓய்வூதிய பலன்கள்

2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர், பி. எப். கடன் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது. திருச்சி மண்டலத்தில் தொ.மு.ச. வை சேர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான விடுப்பு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகிகள் சிவபெருமாள், ரெங்கசாமி, தாஸ் உள்பட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய சங்க செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்