சென்னிமலை, பாரியூர், பச்சைமலையில் உள்ள கோவில்களில் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு, சென்னிமலை, பாரியூர், பச்சைமலையில் உள்ள கோவில்களில் ரூ.6¼ லட்சத்தை உண்டியல்களில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். சென்னிமலை முருகன் கோவில் சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 14-ந் தேதி அன்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது காணிக்கையாக கிடைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள் கோவில் நிர்வாகம் சார்பில்

Update: 2016-12-29 22:30 GMT
ஈரோடு,

சென்னிமலை, பாரியூர், பச்சைமலையில் உள்ள கோவில்களில் ரூ.6¼ லட்சத்தை உண்டியல்களில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

சென்னிமலை முருகன் கோவில்

சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 14-ந் தேதி அன்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது காணிக்கையாக கிடைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள் கோவில் நிர்வாகம் சார்பில் வங்கியில் செலுத்தப்பட்டது. அதன்பிறகும் யாராவது கோவில் உண்டியலில் செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை காணிக்கையாக செலுத்தியிருந்தால் இன்று (வெள்ளிக்கிழமை) வங்கியில் செலுத்த கடைசி நாள் என்பதால் நேற்று முன்தினம் சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்து.
இந்த பணி ப.முருகையா, பெருந்துறை கோவில் ஆய்வாளர் பெ.ஜெயமணி, சென்னிமலை கோவில் செயல் அதிகாரி எம்.அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். இதில் 3 லட்சத்து 806 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இது 14 நாட்களில் கிடைத்த காணிக்கை ஆகும்.

கொண்டத்து காளியம்மன்

இதேபோல் பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவிலாக அமரபணீஸ்வரர் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த உண்டியல்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 6 மாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. தற்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைவதால் இந்த கோவில்களில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

ரூ.1¾ லட்சம்...

இதில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டாலர் நோட்டுகள் சில இருந்தன. மேலும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 13-ம், புதிய ரூ.500 நோட்டு ஒன்றும், பழைய ரூ.500 நோட்டுகள் 25-ம், ரூ.1,000 நோட்டுகள் 5-ம் இருந்தது. மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 719 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 10 கிராம் தங்கமும், 6 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது.
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிக்குமார், ஈரோடு உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கலந்துகொண்டு உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

பச்சைமலை

கோபி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இந்த பணி இந்து அறநிலையத்துறை ஈரோடு உதவி ஆணையாளர் முருகையா தலைமையில், ஆய்வாளர் சந்திரசேகரன், கோவில் செயல் அதிகாரி பாலமுருகன் முன்னிலையில் நடந்தது. இதில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 643-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் செய்திகள்