நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

சென்னை, நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்து லாபத்தில் பங்கு தருவதாக கூறி கட்டிடகாண்டிராக்டரிடம் ரூ.2 கோடியை மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் நேற்று

Update: 2016-12-29 22:45 GMT
சென்னை,

நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்து லாபத்தில் பங்கு தருவதாக கூறி கட்டிடகாண்டிராக்டரிடம் ரூ.2 கோடியை மோசடி செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நிறுவனத்தில் பங்குதாரர்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நியூமேன். கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்து உள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கெவின் (வயது 46) என்பவர் பெரிய அளவில் கிரானைட், ரியல் எஸ்டேட் மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவர் நடத்தும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் தெரிவித்தார். சென்னை தியாகராயநகரில் பெரிய அளவில் அலுவலகம் நடத்தி வந்தார்.

ரூ.2 கோடி மோசடி

அவரது பேச்சை நம்பி ரூ.2 கோடி முதலீடு செய்தேன். என்னை போலவே ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பங்குதாரர்களாக சேர்த்தார். ஆனால் அவர் உண்மையில் தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை. கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டார். நானும் ரூ.2 கோடி இழந்துவிட்டேன். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரியல் எஸ்டேட் அதிபர்

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் கெவினும், அவரது கூட்டாளி ஆசிக் (36) என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கெவினின் மனைவி உள்பட மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். ஆசிக் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்.

இதற்கிடையில் கெவின் மீது அருள் என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக புகார் கொடுத்து உள்ளார். குவைத்தில் அச்சகம் நடத்தி வரும் சுலைமான் என்பவரிடமும் ரூ.1.5 கோடி சுருட்டியதாக தெரிகிறது. கைதான கெவினும், ஆசிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தகராறு செய்த 7 பேர் கைது

* ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலந்தூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு கார்களை இணைத்தவர்கள் பேச சென்றபோது, அங்கிருந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் பொருட்களை உடைத்ததாக கோதண்டபாணி(34), ரமேஷ்(48), பாலமுருகன்(35) உள்பட 7 பேரை புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.

* வில்லிவாக்கம், தியாகராயநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசார தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெளிமாநிலத்தை சேர்ந்த 6 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விபசார தரகர்கள் சிகாபுதீன், பவானிகாந்தி, ரவிக்குமார், விஷால் சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்