மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி அமாவாசை மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு ஊஞ

Update: 2016-12-29 23:00 GMT

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி அமாவாசை

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவ அம்மன் 14 கரங்களுடன் புலி வாகனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11.30 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை மேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.

ஊஞ்சல் உற்சவம்

பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பி அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல்மலையனூர் தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ் (மேல்மலையனூர்), மோகனசுந்தரம் (திருவண்ணாமலை), அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை பூசாரி, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். ஊஞ்சல் உற்சவத்தையொட்டி செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்