கும்மிடிப்பூண்டி அருகே மாயமான சகோதரிகள் கிணற்றில் பிணமாக கிடந்தனர்

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான சகோதரிகள் கிணற்றில் பிணமாக கிடந்தனர். சகோதரிகள் மாயம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள கரும்புகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 38). கட்டுமானத்தொழிலாளி. இவரது மனைவி உமா

Update: 2016-12-28 23:43 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான சகோதரிகள் கிணற்றில் பிணமாக கிடந்தனர்.

சகோதரிகள் மாயம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள கரும்புகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 38). கட்டுமானத்தொழிலாளி. இவரது மனைவி உமா (32). இவர்களுக்கு அர்ச்சனா என்ற மலர் (7), சஞ்சனா(4) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் அர்ச்சனா கரும்புகுப்பத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26–ந் தேதி ஜெய்சங்கர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். மதியவேளையில் அவரது மனைவி உமா மீஞ்சூரில் உள்ள உறவினர் ஒருவரின் சாவு வீட்டுக்கு சென்று விட்டார். பெண் குழந்தைகள் 2 பேர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.

இந்த நிலையில் அன்றைய தினம் மாலை 5 மணி வரை அர்ச்சனாவும், சஞ்சனாவும் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து உள்ளனர். அதன் பிறகு அவர்கள் 2 பேரையும் காணவில்லை. வீட்டில் இருந்து திடீரென மாயமான சகோதரிகள் எங்கே சென்றார்கள்? மாயமான அவர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் தொடர்ந்து உறவினர்கள் கடந்த 3 நாட்களாக அவர்களை பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தேடிவந்தனர். மேலும் இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தும் விசாரித்து வந்தனர்.

பிணமாக கிடந்தனர்

இந்த நிலையில் நேற்று காலை ஜெய்சங்கர் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள தைலமரத்தோப்பில் உள்ள தரைகிணறு ஒன்றில் மேற்கண்ட சகோதரிகளான அர்ச்சனாவும், சஞ்சனாவும் பிணமாக கிடந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஜெய்சங்கரின் மனைவி உமா, நூறு நாள் வேலைக்கு செல்லும்போது மேற்கண்ட தைல மரத்தோப்பு வழியாக தனது மகள் சஞ்சனாவை எப்போதும் உடன் அழைத்துச்செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் இரவு தங்களது அம்மாவை தேடி அர்ச்சனாவும், சஞ்சனாவும் தைலமரத்தோப்பு வழியாக சென்றபோது எதிர்பாரத விதமாக தரை கிணற்றில் விழுந்து பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்