மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்

குழித்துறை, மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேம்பால பணி மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.147 கோடி ஒதுக்கியுள்ளது. அதன்ப;

Update: 2016-12-28 23:20 GMT
குழித்துறை,

மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மேம்பால பணி

மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.147 கோடி ஒதுக்கியுள்ளது. அதன்படி வெட்டுமணியில் இருந்து பம்மம் வரையில் மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக 2½ கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் சுமார் 40 அடி அகலத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைகிறது.

மேம்பாலத்துக்காக இப்போது சாலையில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பாலத்தின் தூண்கள் வெட்டுமணி முதல் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதி வரையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுப்பகுதியிலும், சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அகலமாக அமைவதால், சாலையின் இரு பக்கமாகவும், சந்திப்பு பகுதியில் இருந்து பம்மம் வரையில் சாலையின் நடுவிலும் அமைக்கப்படும். அதன்படி முதற்கட்டமாக வெட்டுமணி முதல் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதி வரை சாலையின் நடுவில் தூண்கள் அமைப்பதற்கான மண் ஆய்வு மற்றும் ஆரம்பக்கட்ட பணி நடக்கிறது. இந்த பகுதியில் தூண்கள் அமைத்த பின்பு சந்திப்பில் இருந்து பம்மம் வரையில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும்.

போக்குவரத்து மாற்றம்

தற்போது தூண்கள் அமைப்பதை தொடர்ந்து மார்த்தாண்டத்தில் வாகன போக்குவரத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்கள் தற்போது உள்ளபடியே ஒருவழிப்பாதையாக செல்லும். இதற்காக மார்த்தாண்டம் ஸ்டேட் வங்கி முன்பு தடுப்பு வேலி அமைத்து மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து குழித்துறை வரை ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்தும், குலசேகரம், திருவட்டார், பள்ளியாடி போன்ற பகுதிகளில் இருந்தும் மார்த்தாண்டம் வரும் பஸ்கள், வழக்கம்போல் மார்த்தாண்டம் சந்திப்பு வந்து பஸ் நிலையம் செல்கிறது.

கொல்லங்கோடு, தூத்தூர், இரையுமன்துறை, அருமனை போன்ற பகுதிகளில் இருந்து குழித்துறை வழியாக மார்த்தாண்டம் வர வேண்டிய பஸ்கள் குழித்துறையில் நிறுத்தப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் குழித்துறையில் இருந்து மேல்புறம், ஞாறாம்விளை, திக்குறிச்சி, பயணம் வழியாக சிராயன்குழி சென்று தேசிய நெடுஞ்சாலை வந்து நாகர்கோவில் செல்கிறது. திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் அருமனை வழியாக செல்கிறது. தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் பஸ் நிலையம் வரவேண்டிய பஸ்கள் வெட்டுமணியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.

சர்குலர் பஸ்கள்

மேலும், மார்த்தாண்டத்தில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பு, வெட்டுமணி, குழித்துறை, கழுவன்திட்டை, ஞாறான்விளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிதாக சர்குலர் பஸ்கள் விடப்பட்டுள்ளன. அதுபோல், வெட்டுமணியில் இருந்து ரெயில் நிலையம் வழியாக மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கும் சர்குலர் பஸ்கள் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெட்டுமணியில் இருந்து மார்த்தாண்டம் சந்திப்பு வரை தூண்கள் அமைக்கும் பணி 4 அல்லது 5 மாதங்களில் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மார்த்தாண்டம் சந்திப்பு மற்றும் அங்கிருந்து பம்மம் வரை தூண்கள் அமைக்கும்போது மேலும் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுமணியில் இருந்து பம்மம் வரையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் சென்று வரும் வகையில் சாலை அமைப்பு பணிகள் நடைபெறும்.

மேலும் செய்திகள்