புதுக்கோட்டையில் பட்டறை அமைத்து உலோக சிலைகளை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள்

புதுக்கோட்டையில் பட்டறை அமைத்து உலோக சிலைகளை செய்யும் பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பித்தளையை உருக்கி சாமி சிலைகள் தெலுங்கானா மாநிலம் இப்லபல்லி பகுதியை சேர்ந்த கைவினைத்தொழில் செய்பவர் மெகபூப். இவர் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்கு வந்து புதுக்கோட்டையில் உள்ள மச்சு

Update: 2016-12-28 23:01 GMT
புதுக்கோட்டையில் பட்டறை அமைத்து உலோக சிலைகளை செய்யும் பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பித்தளையை உருக்கி சாமி சிலைகள்

தெலுங்கானா மாநிலம் இப்லபல்லி பகுதியை சேர்ந்த கைவினைத்தொழில் செய்பவர் மெகபூப். இவர் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்கு வந்து புதுக்கோட்டையில் உள்ள மச்சுவாடி பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் பட்டறை அமைத்து பரம்பரை கைவினைத் தொழிலான சிலைகளை செய்யும் பணிகளை செய்து வருகின்றார். மேலும் 3 அங்குலம் முதல் 12 அங்குலம் உயரம் வரையும், சுமார் 300 கிராம் எடை முதல் 3 கிலோ எடை உள்ள, முருகன், விநாயகர், மாரியம்மன், வெங்கடாஜலபதி, சிவன், பார்வதி மற்றும் தலைவர்களின் சிலைகளை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் செய்து கொடுத்து வருகின்றார்.

இது குறித்து மெகபூப் கூறுகையில், நாங்கள் பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். நாங்கள் எங்களது சொந்த குடும்பத்தினரிடையே தான் திருமணங்கள் செய்து கொள்வோம். எங்கள் குடும்பத்தில்இதுவரை யாரும் கல்வி கற்கவில்லை. என்னோடு எங்கள் பகுதியில் இருந்து வந்த 10 குழுக்கள் சாலையின் ஓரத்தில் பட்டறை அமைத்து சாமி சிலைகள் செய்து கொடுத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய பித்தளை பாத்திரங்களை வாங்கி, அவற்றை உருக்கி மண்ணில் அச்சு வார்த்து அவர்கள் கேட்ட சாமி சிலையை அவர்கள் கூறிய அளவுகளில் செய்து கொடுத்து வருகிறோம்.

சிலை வடிவமைக்க 30 நிமிடம்

1 கிலோ பித்தளை அல்லது பழைய பித்தளை பொருட்களை, கை அடுப்பின் மூலம் உருக்கி, கெமிக்கல் கலந்த மண்ணில் வேண்டிய உருவமைப்புகளை அச்சாக வடிவமைத்து சிறிய ஓட்டை வழியாக, உருக்கிய பித்தளைலோகத்தினை ஊற்றினால் 10 நிமிடத்தில் அந்த வார்ப்பில் உருவம் வடிவமைப்புக்கு வந்தடையும். நாங்கள் வாடிக்கையாளர்களிடம் பித்தளை பொருட்களை வாங்கி கொண்டு சிலைகள் செய்து கொடுத்து கூலியை மட்டும் வாங்கி வருகிறோம்.

சுமார் 300 கிராம் எடையுள்ள சாமி சிலைகள் செய்து கொடுக்க நாங்கள் ரூ.150 முதல் கூலியாக பெற்று வருகிறோம். மேலும் பெரிய அளவு சிலைகள் செய்யும் போது கூடுதல் தொகையை கூலியாக வாங்கி வருகிறோம். ஒரு சிலையை வடிவமைக்க குறைந்தது 30 நிமிடம் ஆகும் என்றார். இதைக்கண்ட அந்த வழியாக செல்பவர்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பித்தளை பொருட்களை கொண்டு வந்து கொடுத்து, தங்களுக்கு வேண்டிய சாமி சிலைகளை வடிவமைத்து வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்