பினாமி சொத்துகள் சட்டம் சாமானிய மக்களை பாதிக்காததை உறுதிப்படுத்துங்கள் மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்

‘‘பினாமி சொத்துகள் சட்டத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாததை உறுதிப்படுத்துங்கள்’’ என்று மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தியது. பினாமி சொத்துகள் சட்டம் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்கப்பட்டதையடுத்து, பினாமி சொத்துகள் மீது

Update: 2016-12-28 22:41 GMT

மும்பை

‘‘பினாமி சொத்துகள் சட்டத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாததை உறுதிப்படுத்துங்கள்’’ என்று மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தியது.

பினாமி சொத்துகள் சட்டம்

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்கப்பட்டதையடுத்து, பினாமி சொத்துகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில், கடுமையான சட்டம் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், பினாமி சொத்துகள் சட்டத்தை மேற்கோள் காட்டி, சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–

வெளிநாடுகளில் கிடக்கும் கருப்பு பணத்தை மீட்க பிரதமர் மோடி ‘சர்ஜிகல்’ தாக்குதல் தொடங்கினார். ஆனால், உண்மை என்னவென்றால், இந்த நடவடிக்கையின் மூலம் ஒற்றை பைசா கூட வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படவில்லை.

உறுதிப்படுத்துங்கள்

இப்போது, பினாமி சொத்துகள் மீதான அரசின் திட்டம் என்ன?. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை போல், பினாமி சொத்துகள் சட்டம் நடவடிக்கை மூலம் சாமானிய மக்கள் கஷ்டங்களை சந்திக்க மாட்டார்கள் என்றும், பாதிப்படைய மாட்டார்கள் என்றும் நம்புகிறோம். இதனை மத்திய அரசு உறுதிப்படுத்தட்டும்.

மத்திய அரசின் நடவடிக்கையால் சாமானிய மக்களின் ஆடைகள் களையப்படும் அதே நேரத்தில், உண்மையான பினாமி சொத்துதாரர்கள் தங்களது சொத்துகளை சட்டப்பூர்வமாக்கி விட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

கருப்பு– வெள்ளை

ரூபாய் நோட்டு மதிப்பு இழக்கப்பட்டபோது கோடிக்கணக்கான ரூபாய் கருப்பு பணம் எப்படி வெள்ளையாக மாற்றப்பட்டதோ அதேபோல், பினாமி சொத்துகள் மீதான சட்டம் அறிவிக்கப்பட்டதும், பினாமி எஸ்டேட்கள் வெள்ளையாக மாற வாய்ப்பு இருக்கிறது. தவிர, சட்டங்கள் பணக்காரர்களை பாதுகாக்கவும், ஏழைகளையும் நசுக்கவும் இயற்றப்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்