சேலத்தில் பரபரப்பு போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து பெண் வக்கீல் தர்ணா போராட்டம் மகன் உள்பட 3 பேரை போலீசார் அழைத்து சென்று தாக்கியதாக புகார்

சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து பெண் வக்கீல் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மகன் உள்பட 3 பேரை போலீசார் அழைத்து சென்று தாக்கியதாக அவர் புகார் தெரிவித்தார். 3 பேரிடம் விசாரணை சேலம் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்

Update: 2016-12-28 22:45 GMT

சேலம்,

சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து பெண் வக்கீல் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மகன் உள்பட 3 பேரை போலீசார் அழைத்து சென்று தாக்கியதாக அவர் புகார் தெரிவித்தார்.

3 பேரிடம் விசாரணை

சேலம் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் பிரவீணா (வயது 42). வக்கீல். இவரது மகன் கீர்த்திவாசன் (16). தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறான். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஒருவரை ஊருக்கு அனுப்பி வைக்க புதிய பஸ்நிலையத்திற்கு செல்வதாக தாய் பிரவீணாவிடம் கீர்த்திவாசன் கூறி சென்றதாக தெரிகிறது. பின்னர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் பிரசாந்த் (19), சந்தோஷ் (17) ஆகியோருடன் கீர்த்திவாசன் நேற்று அதிகாலை 2 மணியளவில் வின்சென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வழிதெரியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் அங்கு அழைத்து சென்றுவிடுமாறு இவர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் அந்த முதியவரை ஏற்றி அழைத்து சென்றார். ஆனால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீசார் சிறிது நேரத்தில் மீண்டும் அதே இடத்திற்கு முதியவரையும், பிரசாந்தையும் வேனில் அழைத்து வந்தனர். அப்போது, இரவு நேரத்தில் பேக்கரியில் என்ன வேலை என்று கூறிய போலீசார், விசாரணைக்காக அவர்களை அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், முதியவரை மட்டும் போலீசார் விடுவித்து மீதமுள்ள 3 பேரையும் விசாரணை நடத்தினர்.

பெண் வக்கீல் தர்ணா

இந்தநிலையில், நேற்று அதிகாலை இந்த விஷயம் தொடர்பாக தனது தாய் பிரவீணாவிற்கு செல்போன் மூலம் கீர்த்திவாசன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வக்கீல் பிரவீணா, அங்கு வந்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பிரசாந்தின் பெற்றோரும் அங்கு வந்து கதறி அழுதனர். பிறகு அவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு 3 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

ஆனால் போலீசார் எனது மகனையும், அவனது நண்பர்களையும் அழைத்து சென்று தாக்கினார்கள் என்றும், இது குறித்து போலீசாரிடம் விளக்கம் கேட்டால் பதில் அளிக்க மறுக்கின்றனர் என்றும் வக்கீல் பிரவீணா பரபரப்பு புகார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்