தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் காய்ந்த நெற்பயிர்களுடன், கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு பங்கேற்றனர்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தவாறு கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனி

Update: 2016-12-28 23:15 GMT

தஞ்சாவூர்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தவாறு கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட தலைவர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வறட்சி மாநிலம்

போராட்டத்தில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை உடனே தொடங்க வேண்டும். கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்பு பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், தென்னை பாதிப்பிற்கு உரிய நிவாரணமும் உடன் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை வறட்சியின் காரணமாக 200 நாட்களாக உயர்த்தி, சம்பளத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்த மற்றும் அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருகிய நெற்பயிர்கள்

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன், மாநிலக்குழு உறுப்பினர் நீலமேகம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாலதி, நகர செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சையில் நேற்று காலை மழை பெய்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடைபிடித்தவாறு கலந்து கொண்டனர்.

பின்னர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நனையாமல் இருப்பதற்காக கலெக்டர் அலுவலக வாசல் முன்பு தகரத்தினால் ஆன பந்தலும் அமைத்து இருந்தனர். மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு கருகிய நெற்பயிர்களையும் வைத்திருந்தனர். மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே சமைத்து சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்