திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி சாமி தரிசனம் ‘இஸ்தி கப்பல்’ வரவேற்பு அளிக்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மதியம் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மகள் சர்மிஸ்தாமுகர்ஜி மற்றும் குட;

Update: 2016-12-28 23:00 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மதியம் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மகள் சர்மிஸ்தாமுகர்ஜி மற்றும் குடும்பத்தினர் விமானம் மூலமாக ரேணிகுண்டா வந்தனர். அங்கிருந்து காரில் திருச்சானூருக்கு வந்தனர். அங்கு, பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருச்சானூரில் இருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்தனர். அவர்கள், திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மதியம் 1.30 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு பேட்டரி கார் மூலம் புஷ்கரணிக்கு அருகில் உள்ள வராகசாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் ஏழுமலையான் கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்கு வந்தார். நுழைவு வாயிலில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தின் உயரிய வரவேற்பான, ‘இஸ்தி கப்பல்’ வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம்

கோவிலில் நுழைந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மதியம் 1.50 மணிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள வகுளமாதாதேவி, லட்சுமி நரசிம்மசுவாமி, வரதராஜசாமி, பாஷிங்கார்ல சன்னதி உள்பட பல்வேறு சன்னதிகளில் தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், 2017–ம் ஆண்டு காலண்டர், டைரி, சாமி படம் ஆகியவற்றை வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வேத பண்டிதர்கள், வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசுகையில், ஏழுமலையானின் அருளால் நான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. 2017–ம் ஆண்டு புத்தாண்டில் மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்றார்.

அதிகாரிகள் வரவேற்பு

முன்னதாக திருமலைக்கு வந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை, ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன், ஆந்திர மாநில மந்திரிகள் கோபாலகிருஷ்ணாரெட்டி, நாராயணா, போலீஸ் டி.ஐ.ஜி.பிரபாகர்ராவ், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியுமான சீனிவாஸ், திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர் மற்றும் பெரிய ஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

மேலும் செய்திகள்