தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் 70 சதவீதம் பயிர்கள் பாதிப்பு அரசுக்கு முதல் கட்ட அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில், வறட்சியால் பயிரிடப்பட்டு இருந்த 70 சதவீதம் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2016-12-28 19:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வறட்சியால் பயிரிடப்பட்டு இருந்த 70 சதவீதம் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடும் வறட்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களில் நல்ல மழை பெய்தது. இதனை நம்பிய மானாவாரி விவசாயிகள் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் எக்டர் பரப்பில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால் தொடர்ந்து பருவமழை பெய்யவில்லை. குளங்கள் வறண்டு போயுள்ளன. இதனால் தண்ணீரின்றி பெரும்பாலான பயிர்கள் கருகி விட்டன.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கருகி பயிர்களுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர் ரவிகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் வறட்சி பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

70 சதவீதம் பாதிப்பு

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 17–ந் தேதி வரையிலான சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பாதிப்பு தொடர்பாக முதல்கட்ட அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கடந்த 20–ந் தேதி அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் மாவட்டத்தில் சுமார் 70 சதவீதம் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காப்பீடு திட்டத்தில் ஆர்வம்

தொடர்ந்து வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் அடுத்தகட்ட அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார். அதேநேரத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இது வரை விவசாயிகள் சுமார் ரூ.4 கோடி வரை பிரீமியம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்