தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 237 பேர் கைது

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கிருஷ்ணகிரியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 237 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவ

Update: 2016-12-28 23:00 GMT

கிருஷ்ணகிரி,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கிருஷ்ணகிரியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 237 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்டக்குழு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பேராட்டத்தின் 3–வது நாளான நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டராமன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் நிர்வாகிகள் இருதயராஜ், ராமசாமி, அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களாக அறிவித்து, அவசியமான நிவாரண திட்டங்களை உடனே நிறைவேற்றிட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டும்.

நிவாரண உதவி

பயிர் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டும். வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள பயிர்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பணி வழங்கிட வேண்டும். தினக்கூலியாக ரூ. 400 வழங்கிட வேண்டும். 2015–16–ம் ஆண்டுக்குரிய தேசிய வேளாண் காப்பீடு திட்ட இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகணை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அனுமதியின்றி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 237 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்