பாம்பன் தூக்குப்பாலம் ரூ.40 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படுகிறது மார்ச் மாதம் பணிகள் தொடக்கம்

பாம்பன் தூக்குப்பாலம் ரூ.40 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. தூக்குப்பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவின் முகப்பில் உள்ள பாம்பனையும் பாம்பன் ரெயில் பாலமும், பாம்பன் ரோடு பாலமும்

Update: 2016-12-28 22:15 GMT

ராமேசுவரம்,

பாம்பன் தூக்குப்பாலம் ரூ.40 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன.

தூக்குப்பாலம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவின் முகப்பில் உள்ள பாம்பனையும் பாம்பன் ரெயில் பாலமும், பாம்பன் ரோடு பாலமும் இணைக்கின்றன. இவற்றில் பாம்பன் ரெயில் பாலம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தப்பாலத்தை சிறிய கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் மூடித்திறக்கும் “தூக்குப்பாலம்“ சுற்றுலா பயணிகளை கவரும் ஓர் அம்சமாகும்.

இந்த தூக்குப் பாலத்தை தெற்கு ரெயில்வேயின் தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மார்ச்சில் பணிகள்

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் 102 ஆண்டுகளை கடந்தும் நல்லநிலையில் உள்ளது. இந்த பகுதியை கப்பல்கள் கடந்து செல்லும் போது பணியாளர்கள் மூலம் தூக்குப் பாலம் திறந்து மூடப்படுகிறது. இந்த தூக்குப் பாலத்தை அகற்றி விட்டு அதற்கு பதிலாக ரூ.40 கோடி மதிப்பில் மின் மோட்டார் மூலம் தூக்குப்பாலத்தை திறந்து மூடும் வகையில் புதிதாக தூக்குப் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தூக்குப் பாலமானது 3 நிமிடத்தில் திறந்து, 2 நிமிடத்தில் மூடும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மின்சார ரெயில்கள் செல்லும் போது அதன் வசதிக்கேற்ப திறந்து மூடும் வசதியுடன் கட்டப்படவுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் புதிய தூக்குப் பாலத்திற்கான இணைப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

15 நாள் ரெயில்கள் ரத்தாகும்

முழுமையாக இணைப்புகள் அமைக்கப்பட்ட பின்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மையப்பகுதியில் உள்ள பழைய தூக்குப் பாலம் முழுமையாக அகற்றப்பட்டு கிரேன் மூலம் புதிய தூக்குப் பாலம் பொருத்தப்படும்.

புதிய தூக்குப் பாலத்திற்கான இணைப்புகள் பொருத்தும் பணிகள் நடைபெறும் போது 15 நாட்கள் மட்டும் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை இயக்கப்படும். மண்டபத்தில் இருந்து ரெயில் பயணிகள் ராமேசுவரம் செல்ல வாகன வசதி செய்து கொடுக்கப்படும்.

உலகிலேயே முதல்முறையாக...

தற்போது தூக்குப்பாலம் பகுதியில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் புதிய தூக்குப் பாலம் அமைக்கப்பட்ட பின்பு காற்றின் வேகத்தை பொருத்து 50 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இங்கு தான் உலகிலேயே முதல்முறையாக கடலில் மின்மோட்டார் மூலம் தூக்குப் பாலம் அமைக்கப்படுகிறது. மின்சார விநியோகம் இல்லாத நேரத்திலும், மின் மோட்டார் செயல்படாத போதும் ஹைட்ராலிக் முறையில் தூக்குப் பாலம் திறந்து மூடப்படும்.

புதிய தூக்குப்பாலம் திறந்து மூடும் போது அதை கண்காணிக்க தூக்குப்பாலத்தை சுற்றி 16 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படும். கேமராவில் பதிவாகும் காட்சிகள் பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். பாம்பன் ரெயில் பாலம் மாலை 6 மணிக்கு மேல் இருள்சூழ்ந்து காணப்படுவதால் ரெயில்வே பாலம் முழுவதும் சூரிய ஒளி மூலம் எரியும் மின் விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்