கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி: முன்னாள் செயலாளர் குடும்பத்துடன் வெளியூர் தப்பி ஓட்டம்
கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான, வங்கியின் முன்னாள் செயலாளர் குடும்பத்துடன் வெளியூர் தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். ரூ.1 கோடி நகை மோசடி ராமநாதபுரம் ம;
ராமநாதபுரம்,
கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான, வங்கியின் முன்னாள் செயலாளர் குடும்பத்துடன் வெளியூர் தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
ரூ.1 கோடி நகை மோசடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கும் பிரிவு கடந்த பல மாதங்களாக பூட்டி கிடப்பதாகவும், அதில் வைக்கப்பட்ட நகை மற்றும் பெறப்பட்ட கடன் தொகை உள்ளிட்டவற்றின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் பலர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்செய்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் நடராஜன் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொள்ள கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசிங் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வங்கி கடந்த பல மாதங்களாக திறக்கப்படவில்லை என்பதும், அங்கு பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் 7சுமார் 144 பேரின் 6 கிலோ 198.05 கிராம் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
3 பேர் கைதுகடந்த 2013–ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்து இந்த நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக மோசடி செய்து கையாடல் செய்யப்பட்டதும், வங்கியின் முன்னாள் செயலாளரான சித்திரங்குடியை சேர்ந்த செல்லச்சாமி மகன் நாராயணன் என்பவர் மூளையாக இருந்து இந்த மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக முன்னாள் செயலாளரான நாராயணன், அவரின் தம்பியான வங்கி செயலாளர் தங்கபாண்டி(44), ஏ.புனவாசலை சேர்ந்த லிங்கம் மகன் முன்னாள் தலைவர் ஆண்டி(50), தற்போதைய வங்கி தலைவர் ராமுத்தேவர் மகன் காளிமுத்து(62) ஆகிய 4 பேர் மீது துணை பதிவாளர் ஜெயசிங் கடலாடி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணபதி, இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து தங்கபாண்டி, ஆண்டி, காளிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சொகுசு பங்களாஇந்த மோசடி சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட வங்கியின் முன்னாள் செயலாளரான நாராயணன் தப்பி ஓடிவிட்டதால் அவரை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். இந்த வங்கியில் முன்னாள் செயலாளரான நாராயணன் சுமார் 110 பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான நகைகளை மோசடி செய்துள்ளதும், மற்றவர்கள் மீதம் உள்ள பாக்கெட்டுகளில் இருந்த நகைகளை மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிக அளவில் நகை மோசடியில் ஈடுபட்ட நாராயணன் முதுகுளத்தூர் பகுதியில் நீச்சல் குளத்துடன் ரூ.1 கோடிக்கு மேல் சொகுசு பங்களா கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த மோசடி குறித்து பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததும் தன் மீது வழக்கு பாயும் என்று அஞ்சிய நாராயணன் கடந்த 18–ந்தேதி இரவோடு இரவாக வெளியூருக்கு தப்பி சென்றுவிட்டார்.
வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நாராயணன் தனது மோசடி கணக்கு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக நகை கடன் மற்றும் பணம் கொடுத்தது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், பதிவேடுகள், ரசீது புத்தகங்கள் ஆகியவற்றையும், நகை பெட்டக சாவியையும் இதுநாள் வரை கொடுக்காமல் தனது வீட்டிலேயே ரகசிய அறையில் பதுக்கி வைத்துள்ளாராம். இதன்காரணமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு நகைகள் அடகு வாங்கப்பட்டது? எவ்வளவு பணம் பெறப்பட்டது? என்பது போன்ற முழுமையான விவரங்கள் தெரியாமல் அதிகாரிகள் திகைத்து வருகின்றனர்.
ரூ.101 பணம்மோசடி தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் வங்கிக்கு சென்று நகைபாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, அதில் நகைகளுக்கு பதிலாக ரூ.101 பணம் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சினிமா படங்களில் கொள்ளையடிப்பவர்கள் பட்டை நாமம் வைத்து விட்டு போவது போன்று, பாதுகாப்பு பெட்டகத்தில் மொய் எழுதியது போன்று ரூ.101 வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் திகைத்து போயினர்.
மேலும், விவசாய கடன் வாங்கும் விவசாயிகள் கொடுக்கும் நகையின் முழு அளவிற்கும் கடன் வழங்கப்படுவதில்லை. அதில் சேதாரம் உள்ளிட்டவைகளை கழித்து விடுவதால், அடகு வைக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு தெரியாமல் உள்ளது. இவரை பின்பற்றி தான் மற்றவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற இந்த மெகா மோசடி சம்பவம், விரைவில் வணிக குற்ற புலனாய்வுதுறைக்கு மாற்றப்பட உள்ளது. முன்னதாக சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.