பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான ‘கெடு’ 2 நாளில் முடிவடைகிறது

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செலுத்த 30-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) காலக்கெடு முடிவடைகிறது. காலக்கெடு முடிகிறது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பொது

Update: 2016-12-27 23:00 GMT
புதுச்சேரி

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செலுத்த 30-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) காலக்கெடு முடிவடைகிறது.

காலக்கெடு முடிகிறது

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து வந்தனர்.

சில அத்தியாவசிய உபயோகங்களுக்கு மட்டும் கடந்த 15-ந் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, சுங்கவரி என்று பல உபயோகங்களுக்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் நிறுத்தப்பட்டது.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்ய 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி அறிவித்த 50 நாள் காலக்கெடு 30-ந் தேதியோடு முடிவடைகிறது.

நீண்ட வரிசையில் காத்திருப்பு

ஏற்கனவே ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக புதுவை நகரில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.கள் மற்றும் வங்கிகள் முன்பும் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்வதில் பொதுமக்கள் தினமும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த இன்னும் 2 நாட்களே காலக்கெடு உள்ளதால், வங்கிகள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. பணத்தை பெறுவதற்காக காத்திருந்தது போல, பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

தினமும் திண்டாட்டம்

அதேவேளையில் மூடப்பட்ட நிலையில் இருக்கும் அனைத்து ஏ.டி.எம்.களையும் உடனடி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், ஏ.டி.எம்.களில் ரூ.100 நோட்டுகள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், “பணத்தட்டுப்பாடு காரணமாக தினமும் திண்டாட வேண்டியது உள்ளது. தேடி அலைந்து ஏதேனும் திறந்து கிடக்கும் ஒரு ஏ.டி.எம்.-ல் கால் கடுக்க காத்திருந்தாலும் ரூ.2 ஆயிரம் நோட்டு தான் கிடைக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கினால் கூட ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை தர கடைக்காரர்கள் மறுக்கிறார்கள். எனவே பணம் இல்லாமல் மூடி கிடக்கும் அனைத்து ஏ.டி.எம்.களிலும் தேவையான அளவு பணம் நிரப்பி உடனடியாக திறக்க வேண்டும். அதில் ரூ.100 நோட்டுகளும் அதிகளவில் கிடைக்க ஆவன செய்யவேண்டும்” என்றனர்.

புதுவையில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடி கிடப்பதால், அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் எப்படி சம்பளம் கிடைக்கப்போகிறது? என்று இப்போதே மக்கள் கவலைப்பட தொடங்கி விட்டனர். 

மேலும் செய்திகள்