10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்று வங்கி அதிகாரிகள் தகவல்

வெள்ளியணை, 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியுள்ளது. 10 ரூபாய் நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எனவே அதனை பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினர். அறிவி

Update: 2016-12-27 22:00 GMT

வெள்ளியணை,

10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியுள்ளது. 10 ரூபாய் நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எனவே அதனை பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து வளர்ச்சி திட்டங்களை முடக்கும் வகையில் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளிடம் கட்டு கட்டாய் முடங்கி கிடக்கும் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், பிரதமர் மோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ளும் முயற்சியில் இன்று வரை சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவதி

இதற்கிடையே ஏழை மக்களின் கைகளில் தாராளமாக புழங்கி வந்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியால் மக்கள் சிறு சிறு பொருட்களை கூட கடைகளில் வாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சங்க காலம் தொடங்கி இன்று வரை பொருட்களை வாங்க மக்கள் நாணயங்களை பயன்படுத்தி வருகின்றனர். சங்க காலத்தில் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் இடையே நடந்த வர்த்தகம் பற்றி அறிந்து கொள்ள அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நாணயங்களே சாட்சியாக உள்ளன. தொன்றுதொட்டு மக்களிடையே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயங்கள் வெள்ளையர்களின் ஆட்சியிலும் தொடர்ந்து கால் அணா, அரை அணா, 2 அணா, 8 அணா என மதிப்புடன் மக்கள் பொருட்களை வாங்கவும், விற்கவும் பயன்படுத்தி வந்தனர். 1957ம் ஆண்டு அணா நாணயங்கள் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக பைசா நாணயங்களை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது.

பயன்படுத்தலாம்

இன்று வரை புழக்கத்தில் இருந்து வரும் பைசா நாணயங்களில் 10 ரூபாய் நாணயத்தை தற்போது பஸ்களிலும், மளிகை கடைகளிலும், சிறு வியாபார நிறுவனங்களிலும் வாங்க மறுக்கின்றனர் என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். காரணம் கேட்டால் வாங்க மறுக்கும் வியாபாரிகள் போலியான நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதால் அரசு செல்லாது என அறிவித்ததாக கூறுகின்றனர். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

ரிசர்வ் வங்கியிடம் இருந்து அப்படியொரு அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 10 ரூபாய் நாணயம் செல்லும். அதனால் தாராளமாக அதை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்பார்ப்பு

இது குறித்து வெள்ளியணை பொதுமக்கள் கூறும்போது, “ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லுமா?, செல்லாதா? என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடுவதுடன், அதை வாங்க மறுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்“ என்று கூறுகின்றனர். எது எப்படியோ சங்க காலம் தொட்டு இன்று வரை மக்களிடம் இரண்டர கலந்திருக்கும் நாணயங்கள் இன்னும் பல காலத்திற்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்