100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

வேடசந்தூரில், 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பளம் வழங்கப்படவில்லை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் ஊராட்சியில் சுமார் 10–க்கும் மேற்பட்ட ஊர்கள்;

Update: 2016-12-27 22:00 GMT

வேடசந்தூர்,

வேடசந்தூரில், 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சம்பளம் வழங்கப்படவில்லை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் ஊராட்சியில் சுமார் 10–க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தூர்வாருதல், வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாரந்தோறும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் கோவிலூர் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சம்பளம் வழங்கப்படாததால் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

முற்றுகை

இந்தநிலையில் உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேடந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குஜியலியம்பாறை ஒன்றிய செயலாளர் பாலுபாரதி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளின் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்