தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு

அரசு வழங்கும் நலத்திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார். சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா குமரி மாவட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாஞ்சில்;

Update: 2016-12-27 22:30 GMT

நாகர்கோவில்,

அரசு வழங்கும் நலத்திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

குமரி மாவட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு சிறுபான்மையினர் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையின சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 லட்சம் இணை மானியமும், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளியே வரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி போன்ற மதவாரி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகைகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

விழிப்புணர்வு

எனவே சிறுபான்மையின மக்கள் நன்கு படித்து, கல்வி அறிவை வளர்த்து கொள்வதோடு, தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் நலத்துறை சார்பாக வழங்கப்படும் நலத்திட்டங்கள், கல்வி உபகரணங்கள் குறித்து, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும், 9 சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.77,500–க்கான காசோலைகளையும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

அதிகாரிகள்

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சரவணன் மற்றும் அகமதுகான், அருட்தந்தை உபால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்