தேனில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு

விழுப்புரம், விழுப்புரத்தில் தேனில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- நெல் வியாபாரி

Update: 2016-12-27 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் தேனில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நெல் வியாபாரி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்காரணை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாபு (வயது 38), நெல் வியாபாரி. இவர் விழுப்புரம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து அதனை விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து பெரிய வியாபாரிகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகையை பெற்று வந்தார்.

இவருக்கு கவிதா(30) என்கிற மனைவியும் கீர்த்திகா (3½), கீர்த்தனா (3½) என்கிற இரட்டை குழந்தைகளும் இருந்தனர். தற்போது பாபு விழுப்புரம் கைவல்லியர் தெருவில் உள்ள தனது மாமனார் மணிவண்ணன் வீட்டின் எதிரே ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள உறவினர் மோகனா என்பவரது வீட்டிற்கு பாபு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் விழுப்புரம் வந்தனர். இவர்களை மணிவண்ணன், ரெயில் நிலையத்திற்கு சென்று வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் 4 பேருக்கும் மணிவண்ணன், உணவு வாங்கி கொடுத்துவிட்டு எதிரே உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

4 பேர் சாவு

நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் பேத்திகளை பார்ப்பதற்காக கவிதாவின் தந்தை மணிவண்ணன் தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்று அங்குள்ள அழைப்பு மணியின் சுவிட்சை அழுத்தினார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் கதவை தட்டிப்பார்த்தார். அப்போது கதவு பூட்டப்படாமல் திறந்த நிலையில் இருந்தது.

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இரட்டை குழந்தைகளும், கவிதாவும் வாயில் நுரைதள்ளியபடியும், மருமகன் பாபு அதே அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கியதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கண்ணீர் விட்டு கதறி அழுத மணிவண்ணன், அய்யோ, அம்மா என கூச்சல் போட்டார்.இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாபு குடும்பத்தினர் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் காட்டுத்தீ போல் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடையே பரவவே பாபு வீட்டு முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரின் உடலைை-யும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்கள்

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

பாபுவும், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த ஒருவரும் நெல் வியாபாரத்தில் பங்குதாரர்களாக இணைந்து செயல்பட்டனர். இந்த வியாபாரத்திற்காக பாபு தனக்கு தெரிந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி ரூ.15 லட்சம் வரை தனது தொழில் பங்குதாரருக்கு கொடுத்துள்ளார். இதற்காக பாபு மாதந்தோறும் வட்டித்தொகை கட்டி வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை பங்குதாரரான அந்த நபர், வியாபார ரீதியாக செலவு செய்யாமல் பாபுவை ஏமாற்றி கையாடல் செய்ததாக தெரிகிறது.

இதனால் வாங்கிய கடனுக்கு வட்டித்தொகையை கூட செலுத்த முடியாமல் பாபு சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்களும் தாங்கள் கொடுத்த கடனை திருப்பிக்கேட்டு பாபுவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக கடன் தொல்லையால் பாபு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுபற்றி பாபு தனது மனைவி கவிதாவிடம் கூறி அழுதுள்ளார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என பாபு கூறியுள்ளார். இதற்கு கவிதாவும் சம்மதம் தெரிவித்தார். தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகி விடுமே என எண்ணிய இருவரும், தாங்கள் பெற்ற பிள்ளைகளை தங்களுடனேயே அழைத்துச்செல்ல வேண்டும் என முடிவு செய்தனர்.

தேனில் விஷம் கலந்து...

அதன்படி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் திரும்பிய பாபு, கடைக்கு சென்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி வந்தார். அதை தேனில் கலந்து குழந்தைகள் இருவருக்கும் கவிதா, பாலாடையில் ஊற்றிக்கொடுத்து அவர்கள் இருவரையும் படுக்க வைத்தார்.

ஆசை, ஆசையாய் தவமிருந்து பெற்ற மகள்களை அவர்களது பசியறிந்து பாசத்துடன் பால் ஊற்றி கொடுத்த பாலாடையிலேயே விஷத்தை ஊற்றி கொடுத்து கொலை செய்து விட்டோமே, இந்த நிலைமை வேறு எந்த தாய்க்கும் ஏற்படக்கூடாது என்ற மனவேதனையில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னார் அந்த விஷத்தை தானும் குடித்துவிட்டு தனது கணவர் பாபுவிற்கும் கொடுத்துள்ளார்.

இதில் கவிதா சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கீழே விழுந்து இறந்தார். பின்னர் விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பாபு, தனது கண் முன்னே மனைவி, குழந்தைகள் 3 பேரும் பிணமாக கிடந்ததை பார்த்து வேதனை அடைந்தார். எங்கே தான் மட்டும் பிழைத்து விடுவோமோ என்று நினைத்து அதே அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் செய்திகள்