கடலூர் அருகே பரபரப்பு மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சம்பவம்: பயங்கர ஆயுதங்களை காட்டி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகளை மீட்டுச்சென்ற 50 பேர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம், கடலூர் அருகே மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த 50 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மாட்டுவண்டிகளையும் மீட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பறக்கும்படை அமைப்பு

Update: 2016-12-27 23:15 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த 50 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மாட்டுவண்டிகளையும் மீட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பறக்கும்படை அமைப்பு

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்த சிலர், தங்களது மாட்டுவண்டிகளில் பெண்ணையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்து வீட்டின் முன்பு குவித்து வைத்து, பின்னர் அதனை லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கடலூர் தாலுகா அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நத்தப்பட்டு காலனிக்கு சென்று கண்காணிக்கவும், மாட்டுவண்டிகளில் மணல் கடத்துவதை தடுத்து நிறுத்தவும் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஒரு கிராம நிர்வாக அலுவலர், 10 கிராம உதவியாளர்கள் கொண்ட பறக்கும்படை அமைத்து தாசில்தார் அன்பழகன் உத்தரவிட்டார்.

ஆயுதங்களுடன் கொலை மிரட்டல்

அதன்படி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான பறக்கும்படையினர் நேற்று காலையில் நத்தப்பட்டு காலனி பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெண்ணையாற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு நத்தப்பட்டு காலனி நோக்கி வந்த 4 மாட்டுவண்டிகளை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணல் கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் நத்தப்பட்டு காலனியை சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் இரும்பு குழாய், தடி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று திரண்டு, மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்துக்கு வந்தது. பின்னர் அவர்கள், அங்கிருந்த வருவாய்த்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கையில் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த 4மாட்டுவண்டிகளையும் மீட்டுச்சென்றனர்.

50 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் பற்றி வருவாய் அலுவலர் சிவக்குமார், தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தாசில்தார் அன்பழகன் உடனடியாக நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசாருடன் நத்தப்பட்டு காலனிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் நத்தப்பட்டு காலனிக்கு சென்று தாசில்தார் அன்பழகன் பார்வையிட்டார். அப்போது அங்கு ஒவ்வொரு வீடுகளின் முன்பும் குவியல், குவியலாக மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காலனி மக்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

வருவாய்த்துறையினரை மிரட்டியது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஞானமணி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகளை ஆயுதங்கள் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் பறிமுதல் செய்து வைத்திருந்த 4 மாட்டுவண்டிகளையும் மீட்டுச்சென்ற 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்