அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருடிய வழக்கு: சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேர் கைது

சீர்காழி அருகே அரசு பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் திருடிய வழக்கில் சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மடிக்கணினிகள் திருட்டு சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந

Update: 2016-12-27 22:30 GMT

சீர்காழி,

சீர்காழி அருகே அரசு பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் திருடிய வழக்கில் சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மடிக்கணினிகள் திருட்டு

சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த 30.12.2015 அன்று மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு அறையில் வைத்து இருந்த சுமார் 48 விலையில்லா மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் சுமார் 25 மடிக்கணினிகள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வாய்க்காலில் கிடந்த மடிக்கணினிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார், கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்த சீர்காழி திருக்கோலக்கா தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 40) என்பவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் கிருஷ்ணன், கும்பகோணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் (38), ஆற்றங்கரை தெருவை சேர்ந்த சரவணன் (28), திருவிடைமருதூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (34) ஆகிய 3 பேரின் உதவியுடன் கடந்த ஆண்டு பள்ளியில் இருந்த 48 மடிக்கணினிகளை திருடியதும், அதில் 23 மடிக்கணினிகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 25 மடிக்கணினிகளை விற்பனை செய்ய முடியாததால் நத்தம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் கிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் செந்தில், சரவணன், நாகராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்