அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பு

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். உண்ணாவிரதம் அலங்காநல்லூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக் கோரி அங்குள்ள வ

Update: 2016-12-27 23:15 GMT

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

உண்ணாவிரதம்

அலங்காநல்லூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக் கோரி அங்குள்ள வாடிவாசல் முன்பு உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு ஜல்லிக்கட்டு பேரவை நிறுவனர் ஜெயகார்த்திக் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரஞ்சித், மாவட்ட தலைவர் நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:– ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாகும். ஆங்கிலேயர், முகலாயர், பாரசீகர் உள்ளிட்ட ஜமீன்தாரர் ஆட்சிகளில் கூட ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்கப்படவில்லை. இந்து மதத்தை முன்னிலைப்படுத்தி ஆளும் ஆட்சியாளர்கள், சிவபெருமானின் வாகனமான காளைகளின் இனத்தை அழிக்க நினைக்கும், அன்னிய சக்திகளுக்கு துணை போவது சரியல்ல. பீட்டா என்ற ஒரு தனி அமைப்பு தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் அழிக்க நினைக்கிறது.

யானை, சிங்கம், ஒட்டகம் போன்ற காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில், காளைகளை சேர்த்தது கண்டனத்திற்கு உரியது. கேரளாவில் யானை பந்தயமும், ராஜஸ்தானில் ஒட்டக ஓட்டமும் இன்று வரை நடைபெற்று வருகிறது. இதெல்லாம் விலங்குகள் நலவாரியத்திற்கு தெரியாதா? நீதிமன்ற உத்தரவுப்படி சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. அதுவும் தற்போது நடைபெறவில்லை.

தடையை மீறுவோம்

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்ககூடிய நதிநீர் உள்ளிட்ட உரிமைகளை பெற, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அதை எந்த மாநிலமும் பின்பற்றவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடத்தமுடியாமல் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொரு நிலையிலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் தைப்பொங்கல் போன்ற பாரம்பரிய திருவிழாக்களை கூட கொண்டாட முடியாத அவல நிலை ஏற்படும். எனவே இனிமேலும் நீதிமன்றத்தையும், மத்திய, மாநில அரசுகளையும் எதிர்பார்த்து காத்திருக்காமல் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். இதற்காக காவல்துறையும், அரசு நிர்வாகமும் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு பரிசுகளை பெற்ற காளை வளர்க்கும் மேலூர் தாலுகா சென்னகரம்பட்டி செல்வராணி உண்ணாவிரத பந்தலில் ஆதரவு தெரிவித்து பேசினார். நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் நத்தம் சிவசங்கரன் உள்பட நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத பந்தலில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்று சிலை வைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்