தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கோரி உண்ணாவிரதம் இருந்த 84 பேர் கைது; வியாபாரிகள் கடையடைப்பு விளாத்திகுளம் அருகே பரபரப்பு

விளாத்திகுளம் அருகே புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். உரிய அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததாக 84பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2016-12-27 21:00 GMT
விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். உரிய அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததாக 84பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்– மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது புதூர் நகர பஞ்சாயத்து. இங்கு நகர பஞ்சாயத்து அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் உள்ளன. ஆனால் இங்கு ஒரு தனியார் வங்கியும், கூட்டுறவு வங்கியும் மட்டுமே உள்ளது.

இந்த நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பணத்தட்டுப்பாடு காரணமாக, புதூரில் கூட்டுறவு வங்கி செயல்படாமல் உள்ளது. தனியார் வங்கியிலும் அடிக்கடி பணத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் புதூர் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

கடையடைப்பு

த.மா.கா. வட்டார தலைவர் சேது பாண்டியன், ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன், மோகன்தாஸ், துரைபாண்டியன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகளும் முழு கடையடைப்பு செய்தனர். இதனால் நகரம் வெறிச்சோடியது.

84 பேர் கைது

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறி, உண்ணாவிரதம் இருந்த ஒரு பெண் உள்பட 84 பேரை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் (புதூர் பொறுப்பு), திருஞானசம்பந்தம் (மாசார்பட்டி) மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மாலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்