மணல் கொள்ளை மூலம் தமிழக அரசுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏமனூரில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி

மணல் கொள்ளை மூலம் தமிழக அரசுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று ஏமனூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.கூறினார். சாலை அமைக்கும் பணி தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் நெருப்பூர், பண்ணவாடியா

Update: 2016-12-27 23:00 GMT

தர்மபுரி

மணல் கொள்ளை மூலம் தமிழக அரசுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று ஏமனூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.கூறினார்.

சாலை அமைக்கும் பணி

தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டம் நெருப்பூர், பண்ணவாடியான் காடு, ஏமனூர் ஆகிய மலைக்கிராம பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். நெருப்பூர் பண்ணவாடியான் காடு முதல் ஏமனூர் வரை சுமார் 13 கி.மீ. தொலைவிற்கு பிரதமரின் சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார்.

இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், முன்னாள் எம்.பி. செந்தில் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியதாவது:–

தரம் உயர்த்த நடவடிக்கை

ஏமனூர் மலைக்கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை பெற இந்த பகுதியில் உள்ள ஆற்றை பரிசலில் கடந்து சேலம் மாவட்டத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏமனூர் மலைக்கிராமத்தில் உள்ள பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த பகுதியில் உள்ள 6 குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். தமிழகத்தில் 2003–ம்ஆண்டுக்கு பின்னர் மணல்குவாரிகளை தனியாருக்கு கொடுத்தனர். அதன்பிறகு மணல் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு இழப்பு

இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மணல் கொள்ளை மூலம் தமிழக அரசுக்கு 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஏரியூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பாடிசெல்வம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், செல்வக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்