ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்ட வேலியில் சிக்கி மிளா சாவு தண்ணீரைத் தேடி வந்தபோது பரிதாபம்

ஸ்ரீவைகுண்டம் அருகே தண்ணீரைத் தேடி வந்த மிளா, தனியார் தோட்ட வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. வல்லநாடு மலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், மிளா போன்ற அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது போதிய பருவமழ

Update: 2016-12-26 23:29 GMT

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே தண்ணீரைத் தேடி வந்த மிளா, தனியார் தோட்ட வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

வல்லநாடு மலை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், மிளா போன்ற அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது போதிய பருவமழை பெய்யாததால், மலைப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. இதனால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி, மலையடிவார பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்கள், குடியிருப்புகளுக்கு வருகின்றன.

தண்ணீர் தேடிவந்த மிளா

நேற்று முன்தினம் இரவில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து 2½ வயதுடைய ஆண் மிளா ஒன்று தண்ணீரைத் தேடி, ஸ்ரீவைகுண்டம் அருகே வடக்கு தோழப்பன்பண்ணையில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு வந்துள்ளது. அந்த தோட்டத்தைச் சுற்றிலும் நைலான் கயிற்றால் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வேலியில் மிளாவின் கொம்புகள் சிக்கி கொண்டுள்ளது. அதில் இருந்து வெளியே வர போராடியதில், மிளாவின் வாயில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. வேலியில் சிக்கிய நிலையில் அந்த மிளா உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

வனத்துறையினர் மீட்டனர்

நேற்று காலையில் வாழைத் தோட்டத்துக்கு சென்றவர்கள், மிளா வேலியில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வல்லநாடு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் நெல்லை நாயகம் தலைமையில், வனக் காப்பாளர்கள் காசி, பாலகிருஷ்ணன், வேட்டை தடுப்பு காவலர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

வலையில் கொம்புகள் சிக்கியதில் படுகாயம் அடைந்த மிளாவை மீட்டு, கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மிளா இறந்தது. அந்த மிளாவின் உடலை வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில் புதைத்தனர்.


மேலும் செய்திகள்