போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர்– மக்கள் அதிகாரத்தினர் 27 பேர் கைது

போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர்– மக்கள் அதிகாரத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று மதியம் 1 மணிக்கு கரூர் நகர போலீஸ் நிலைய;

Update: 2016-12-26 22:29 GMT

கரூர்,

போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர்– மக்கள் அதிகாரத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்த சிலர் நேற்று மதியம் 1 மணிக்கு கரூர் நகர போலீஸ் நிலையம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:–

பிரதமர் மோடி உத்தரவின் பேரில், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கத்தை, கத்தையாக பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர்களிடம் சோதனை நடத்தாத நோக்கம் என்ன? என்று மக்களிடம் கருத்து கூறும் வகையில், ஜனநாயக கடமையாக சுவர்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நிர்வாகி ராஜு, மக்கள் அதிகார நிர்வாகி விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று வேறு இடத்தில் வைத்துள்ளனர். இதை கண்டிக்கிறோம். மேலும் போலீசார் பிடித்து சென்ற 2 பேரை விடுதலை செய்யும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

முற்றுகை

அப்போது கரூர் நகர போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்கிறோம் என்று கூறி வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்கள் திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கேயே நின்றபடி கோஷங்கள் எழுப்பினர்.

27 பேர் கைது

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடத்தியதற்காக கைது செய்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து 10 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் நேற்று மதியம் 1 மணி முதல் 1.15 மணி வரை கரூர் நகர போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்