மாணவிகள் விடுதி கட்டிடப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள்–விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதி கட்டிடப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மக்கள் குறைதீர்க

Update: 2016-12-26 22:18 GMT

பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதி கட்டிடப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 346 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அது குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாணவிகள் தங்கும் விடுதி

கூட்டத்தில், பெரம்பலூர் தாலுகா லாடபுரம் 7–வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அமைப்பு செயலாளர் கிட்டு மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், அரசு அறிவித்ததன் பேரில் எங்கள் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஒருவரால் விடுதி கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த நிலத்தில் பெண்களுக்கான சுகாதார வளாக கட்டிடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. எனவே அரசு இடத்தில் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டிடப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

விவசாயிகளுக்கு கடன்

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ஒகளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நாங்கள் நீண்ட காலமாக உறுப்பினர்களாக இருந்து வருகிறோம். கடந்த 13 மாதங்களாக நீண்ட கால கடன் மற்றும் குறுகிய கால கடன் கேட்டு விண்ணப்பித்தும் எந்த விவசாயிக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. மாறாக உரம் மட்டும் கொடுத்து வருகின்றனர். இதனால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே விவசாயிகளுக்கு விவசாய கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இழப்பீடு

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி நெருக்கடியால் இறந்து போன பூலாம்பாடி கறிக்கோழி விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பண்ணையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கூறினால் அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும், என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) துரை, உதவி திட்ட அலுவலர் அமர்சிங் மற்றும் அனைத்துத்துறை அலுலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்