லால்குடியில் தற்கொலை செய்த பெண் விவசாயியின் உடலை சாலையில் வைத்து மறியல் போக்குவரத்து பாதிப்பு

லால்குடியில் தற்கொலை செய்த பெண் விவசாயியின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்கொலை திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த செம்பரை விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. இவரும், இவரது மனைவி லெட்சுமியும

Update: 2016-12-27 00:00 GMT

லால்குடியில் தற்கொலை செய்த பெண் விவசாயியின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த செம்பரை விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. இவரும், இவரது மனைவி லெட்சுமியும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்தாண்டு நெல் பயிரிட்டு இருந்தனர். நேற்பயிர் கதிர் வரும் பருவத்தில் போதிய நீர் இல்லாத காரணத்தினால் முதிர்ச்சி அடையாமல் கருக தொடங்கியது. இதைக்கண்டு கடும் மன வருத்தத்தில் கணவன், மனைவி இருவரும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் லெட்சுமி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தினை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லெட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லெட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று காலை லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநில செயலாளர் விஸ்வநாதன், தென்னக நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய சங்க செயலாளர் புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று லெட்சுமியின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் மதியம் பிரேத பரிசோதனை முடிந்த பின் லெட்சுமியின் உடலை கைப்பற்றிய விவசாயி சங்க பிரதிநிதிகள் மருத்துவமனையில் இருந்து தூக்கிக்கொண்டு போலீசாரின் தடுப்பையும் மீறி லால்குடி நான்கு ரோடு சாலையில் வைத்து மறியல் செய்தனர். மறியலில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர்கள் பாண்டியன், விஸ்வநாதன், அய்யாகண்ணு, நாகராஜ், வீரசேகரன், லெட்சுமியின் குடும்பத்தினர், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் திருச்சி– சிதம்பரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு இணங்காமல் மறியலை கைவிடாமல் இருந்தனர்.

பரபரப்பு

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் ஜவகர்லால்நேரு அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் இறந்த லெட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். உங்கள் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக வழங்குங்கள், அதன் மீது உரிய நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்கிறேன் என்று தாசில்தார் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் லால்குடி நான்கு ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.


மேலும் செய்திகள்