வண்டலூர் பூங்காவில் இருந்து கருங்குரங்கு குட்டியுடன் தப்பியது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி தாய் குரங்கை பிடித்தனர்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து நீலகிரி பெண் கருங்குரங்கு தனது குட்டியுடன் தப்பி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்தது. மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி தாய் குரங்கை பிடித்தனர். தப்பி ஓடிய குட்டி குரங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். குட்டி
வண்டலூர்,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து நீலகிரி பெண் கருங்குரங்கு தனது குட்டியுடன் தப்பி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்தது.
மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி தாய் குரங்கை பிடித்தனர். தப்பி ஓடிய குட்டி குரங்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குட்டியுடன் தாய் குரங்கு தப்பியதுசென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளது. கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயலில் பூங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பகுதியில் சாய்ந்து விழுந்தன. இதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 23–ந் தேதி நீலகிரி கருங்குரங்கு இருப்பிடத்தின் அருகே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த நீலகிரி கருங்குரங்கு தனது பெண் குட்டியுடன் அங்கு விழுந்து கிடந்த மரக்கிளைகளில் தாவி, தாவி பூங்காவில் இருந்து தப்பித்து அருகில் உள்ள கொளப்பாக்கம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் கொடுத்தனர்.
மயக்கி ஊசி செலுத்தினர்உடனடியாக பூங்கா மருத்துவர்கள் 2 பேர் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொளப்பாக்கம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் தாய் மற்றும் குட்டி கருங்குரங்கை வலை மற்றும் கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் கடந்த 4 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
கூண்டு மற்றும் வலையில் குரங்குகள் மாட்டிக்கொள்ளவில்லை. இதனால் பூங்கா மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி குரங்குகளை பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் கொளப்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த தாய் குரங்கு மீது பூங்கா மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் லாவகமாக மயக்க ஊசியை செலுத்தினார்கள். இதில் தாய் குரங்கு மயங்கி கீழே விழுந்தது.
குட்டி குரங்கை தேடும் பணிபின்னர் பூங்கா மருத்துவர்கள் ஊழியர்கள் உதவியுடன் அந்த குரங்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குரங்குக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். பிறகு நீலகிரி கருங்குரங்குகளுக்கான இருப்பிடத்தில் உள்ள இரும்பு கூண்டில் தனியாக அந்த குரங்கை அடைத்து, அதற்கு தேவையான உணவுகளை வழங்கினார்கள்.
பிடிபட்ட தாய் குரங்கிற்கு 8 வயது ஆகிறது. இதற்கு பிறந்த குட்டி பெண் குரங்கை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பூங்காவில் மொத்தம் 18 நீலகிரி கருங்குரங்குகள் இருந்தன. அதில் 2 குரங்குகள் தப்பியது. ஒரு குரங்கு பிடிபட்டு உள்ளது. இதனால் தற்போது பூங்காவில் 17 குரங்குகள் இருக்கிறது.
தப்பியது எப்படி? அதிகாரி விளக்கம்பூங்காவில் இருந்து நீலகிரி பெண் கருங்குரங்கு தனது குட்டியுடன் தப்பியது எப்படி? என பூங்கா அதிகாரி கூறியதாவது:–
கடந்த 12–ந் தேதி ‘வார்தா’ புயல் ஏற்படுவதற்கு முன்பு பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் பத்திரமாக அதனுடைய இருப்பிடங்களில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டது. ஆனால் புயலில் பூங்கா வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது.
இதையடுத்து பூங்காவில் விலங்குகள் இருப்பிடங்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சரி செய்யப்பட்ட நீலகிரி கருங்குரங்கு இருப்பிடத்தில் மீண்டும் 18 குரங்குகளும் விடப்பட்டது. ஆனால் கடந்த 23–ந் தேதி நீலகிரி கருங்குரங்குகள், எந்திரம் மூலம் மரங்களை வெட்டும் போது புதுவிதமான சத்தங்களை கேட்டு அங்கும், இங்குமாக ஓடியது. உடனே ஊழியர்கள் குரங்குகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்துக்கொண்டிருந்தனர்.
ஆபத்து கிடையாதுஅப்போது தாய் நீலகிரி கருங்குரங்கு, தனது பெண் குட்டியுடன் அங்கிருந்து மரக்கிளைகளில் தாவி தப்பித்து ஓடிவிட்டது. தப்பித்த குரங்குகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்தது. இதில் ஒரு குரங்கை நேற்று காலை ஊழியர்கள் பிடித்து விட்டனர். மற்றொரு குட்டி குரங்கை விரைவில் பிடித்துவிடுவார்கள்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. இது சாதாரணமான குரங்கு வகையை சேர்ந்தது தான். இதனால் ஆபத்து கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.