எத்தினஒலே குடிநீர் திட்டத்தால் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா உறுதி
எத்தினஒலே குடிநீர் திட்டத்தால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சித்தராமையா உறுதியளித்தார். ஆலோசனை கூட்டம் எத்தினஒலே குடிநீர் திட்டம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு கிரு
பெங்களூரு,
எத்தினஒலே குடிநீர் திட்டத்தால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சித்தராமையா உறுதியளித்தார்.
ஆலோசனை கூட்டம்எத்தினஒலே குடிநீர் திட்டம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எத்தினஒலே திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எத்தினஒலே திட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில் கூறியதாவது:–
தட்சிண கன்னடா, உடுப்பி, மைசூரு உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் நாங்கள் சமமாக பார்க்கிறோம். தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்ட மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த எத்தினஒலே குடிநீர் திட்டத்தை அரசு அமல்படுத்தவில்லை. இந்த திட்டத்தால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நிலத்தடி நீர்மட்டம்கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. 2 ஆயிரம் அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக அந்த மாவட்டங்களின் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். இத்தகைய நேரத்தில் அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை அல்லவா?.
இந்த காரணத்திற்காக தான் எத்தினஒலே குடிநீர் திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது. ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது அரசின் நோக்கமே தவிர, விவசாயத்திற்கு தண்ணீர் கொடுப்பது அல்ல. நிபுணர்களின் அறிக்கைப்படி எத்தினஒலேயில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 24 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் கிடைக்கிறது.
ஒத்துழைப்பு தர வேண்டும்இதில் 15 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படும். இதன் மூலம் 64 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். மீதமுள்ள தண்ணீர் ஏரிகளில் நிரப்பி வைக்கப்படும். இந்த தண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படாது. இந்த திட்டம் 2012–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களின் மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக இந்த திட்டத்தை அப்போது இருந்த அரசு கொண்டு வந்ததா?.
தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருந்தால் அதை தீர்க்க அரசு தயாராக உள்ளது. எத்தினஒலே குடிநீர் திட்டத்தை அமல்படுத்தும் விஷயத்தில் போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த திட்டம் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களுடன் மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்துவேன். இந்த திட்டத்தில் இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மீண்டும் உங்களுடன் ஆலோசனை நடத்த நான் தயாராக உள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
மந்திரிகள் பங்கேற்புஇந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, உணவுத்துறை மந்திரி யு.டி.காதர், வனத்துறை மந்திரி ரமாநாத்ராய் உள்பட எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.