ரூபாய் நோட்டு ரத்து முடிவால் மக்கள் படும் துன்பங்களை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

ரூபாய் நோட்டு ரத்து முடிவால் மக்கள் படும் துன்பங்களை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார். புகைப்பட கண்காட்சி பெங்களூரு சித்ரகலா பரிஷத் அரங்கத்தில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ரத்து த

Update: 2016-12-26 21:07 GMT

பெங்களூரு

ரூபாய் நோட்டு ரத்து முடிவால் மக்கள் படும் துன்பங்களை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

புகைப்பட கண்காட்சி

பெங்களூரு சித்ரகலா பரிஷத் அரங்கத்தில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ரத்து தொடர்பான புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்துள்ளார். இந்த திட்டம் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பா.ஜனதாவினர் தற்போது அனுபவித்து வருகிறார்கள். ஆரம்ப நாட்களில் இந்த திட்டத்தை மக்கள் வரவேற்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதை எதிர்க்கவில்லை.

பொருளாதாரம் வீழ்ச்சி

ஆனால் நாட்கள் ஆக ஆக இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள துன்பங்களை மக்கள் உணர தொடங்கினர். சாமானிய மக்கள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். வங்கிகளில் பணம் எடுக்க தினம் தினம் அவதிப்படுகிறார்கள். இந்த ரூபாய் நோட்டு ரத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்கள் செய்வோர் அனுபவித்து வரும் துன்பங்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது.

வரி கட்டாத பணக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களை மத்திய அரசு தண்டித்து இருக்க வேண்டும். அதைவிடுத்து அப்பாவி ஏழை மக்களை பிரதமர் மோடி தண்டனைக்கு ஆளாக்கியுள்ளார். இந்த திட்டத்தால் மக்கள் படும் துன்பங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. நாளை(இன்று) டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

125 கோடி மக்கள்

பாராளுமன்ற கூட்டத்தில் ஆளும் பா.ஜனதா கட்சியின் பிடிவாத போக்கால் ரூபாய் நோட்டு ரத்து குறித்து விவாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ரூபாய் நோட்டு ரத்து திட்டத்தின் தோல்வியை பிரதமர் மோடியே ஏற்க வேண்டும். உலகின் எந்த நாடுகளிலும் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை முறை அமலாகவில்லை.

அதேபோல் நமது நாட்டிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்துவது கடினம். 125 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் 3 கோடி பேரிடம் மட்டுமே வங்கி அட்டைகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கும்போது ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை சாத்தியமா? தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்துள்ளதால் நாடு இன்று கடினமான சூழ்நிலையில் உள்ளது.

மக்கள் ஏற்க தயாராக இல்லை

உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ரத்து அறிவிப்புக்கு பிறகு தனியார் வணிக நிறுவனங்கள் செல்போன்கள் மூலம் தங்களின் வியாபாரத்தை நடத்துகின்றன. இதன் மூலம் பிரதமர் மோடி தனது நட்பு வட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை பா.ஜனதாவினர் என்ன தான் ஆதரித்து பேசினாலும், மக்கள் இதை ஏற்க தயாராக இல்லை. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.“

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மேலும் செய்திகள்