கொட்டாரம் அருகே ரயில்வே கிராசிங்கில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கொட்டாரம் அருகே இடையன் விளை கிராமத்தில் சுமார் 350–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நடுவே கன்னியாமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதை உள்ளது. இதில் சுமார்30 வீடுகள் மற்றும் சுமார்500 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாய நிலமும், ரயில்
கன்னியாகுமரி,
கொட்டாரம் அருகே இடையன் விளை கிராமத்தில் சுமார் 350–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நடுவே கன்னியாமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதை உள்ளது. இதில் சுமார்30 வீடுகள் மற்றும் சுமார்500 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாய நிலமும், ரயில்வே கிராசிங் மறுபுறம் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங்கை இடையன்விளை, சிந்தேரி, ஈச்சன்விளை, பூவியூர், முகிலன் குடியிருப்பு உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காவும், பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மத்திய அரசு இந்த ரயில்வே கிராசிங்கை அப்பகுதியில் இருந்து எடுக்க திட்டம் போட்டுள்ளனர். இதை தொடர்ந்து இடையன்விளை கிராம மக்கள் இது குறித்து நாகர்கோவில் இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்காக வைக்கலாமே தவிர நிரந்தரமாக ரயில்வே கிராசிங்கை மூடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் கடந்த 2012 ஆண்டு மாவட்ட கலெக்டா மறுபடியும் ரயில்வே கிராசிங்கை அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இடையன்விளை கிராம மக்கள் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ரயில்வே துறையினர் தீடீர் என இந்த ரயில்வே கிராசிங்கை முழுமையாக மதில்சுவர் கட்டி அடைத்து வந்தனர். இதற்கு இடையன்விளை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மதில் சுவரை உடனே அகற்றும் படி ரயில்வே கிராசிங் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அ.தி.மு.க. எம்.பி. விஜயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிடாததால் பரபரப்பு ஏற்பட்டது.