தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். முற்றுகை போராட்டம் தமிழகத்தை வறட்சி பாதி

Update: 2016-12-26 22:30 GMT

திருப்பூர்,

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

முற்றுகை போராட்டம்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி ஆகியோர் தலைமையில் திரளான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

ரூ.30 ஆயிரம் இழப்பீடு

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளித்து தினமும் ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உரிய நீரை உடனடியாக திறந்து விட வேண்டும். விவசாயிகள் அனுமதியில்லாமல் அத்துமீறி விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருவதையும், அதற்கு மின் தொடரமைப்பு கழகம் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

கலெக்டரிடம் மனு

பின்னர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அனைவரும் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று, கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து அளித்து முறையிட்டனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்