திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ‘தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்’

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வறட்சி மாநிலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவல

Update: 2016-12-26 21:45 GMT

திண்டுக்கல்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வறட்சி மாநிலம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

விவசாய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைப்பதை கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குளம், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

ரூ.25 லட்சம் நிவாரணம்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடகனாறு, அழகாபுரி அணையில் பஞ்சாலை, சோப்பு கம்பெனி கழிவுகள் மற்றும் வேடசந்தூர் பேரூராட்சி கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றி பூமி வறண்டு போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்