மேட்டூர் அணை நீர்மட்டம் 37.74 அடியாக குறைந்தது: சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 37.74 அடியாக குறைந்ததால் சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேட்டூர் அணை பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணை 1
மேட்டூர்,
மேட்டூர் அணை நீர்மட்டம் 37.74 அடியாக குறைந்ததால் சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
மேட்டூர் அணைபருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணை 1934–ம் ஆணடு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்மாதம் முதல் ஜனவரி மாதம் முடிய தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக செப்டம்பர் மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி தனிகுடிநீர்திட்டம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பி.என்.பட்டி–வீரக்கல்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், கொளத்தூர் பேரூராட்சி குடிநீர்திட்டம் என பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேட்டூர் அனல்மின்நிலையம், சேலம் இரும்பாலை உள்பட பல தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
நீர்மட்டம் 37.74 அடியாக சரிவுஇந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையில் 11 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. அடுத்த பருவமழை காலம் ஆன ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையில் உள்ள நீர்இருப்பை கொண்டே மேற்கண்ட அனைத்து குடிநீர் திட்டங்களும் செயல்பட வேண்டும். பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மேட்டூர் அணையின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக பாசனதேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை. இருப்பினும் கொளுத்தும் கோடையின் வெப்பத்தை சமாளித்து மக்களின் குடிநீர் தேவையை மட்டுமாவது மேட்டூர் அணை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நீர்மட்டம் 37.74 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 160 கனஅடியாக உள்ள நிலையில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 750 கனஅடியாக உள்ளதால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்கான அறிகுறியே இல்லாததால் இனிவரும் காலங்களில் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியும். மேலும் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் நாட்களை நெருங்கி வருவதால் இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் விரைவில் குடிநீருக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நந்தி சிலை–கிறிஸ்தவ கோபுரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியாக சரியும் போது பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ கோபுரமும், 67 அடியாக சரியும் போது நந்தி சிலையும் வெளியே தெரிவது வழக்கம். இந்தநிலையில் அணையின் நீர்மட்டம் 37.74 அடியாக குறைந்துள்ளதால் தண்ணீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது.
நந்தி சிலை அமைந்துள்ள நீர்தேக்க பகுதிகள் உழவு செய்யப்பட்டு அங்கு பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. நந்தி சிலையின் அருகே நடந்து செல்ல முடியாதவாறு சிறு ஓடை போல தண்ணீர் ஓடிக் கொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் நந்திசிலையை நெருங்கி சென்று பார்க்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பண்ணவாடி பரிசல் துறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நந்திசிலையை தூரத்தில் நின்று வழிபாடு செய்து விட்டு செல்கிறார்கள்.