ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மறுப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் ஊராட்சியில் உள்ளது பெரு

Update: 2016-12-26 23:00 GMT

உசிலம்பட்டி, 

ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரேஷன் கார்டுகள்

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் ஊராட்சியில் உள்ளது பெருமாள்கோவில்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் ஆதார் எண், செல்போன் நம்பர் ஆகியவற்றை ஆவணமாக பெற்று, அந்தந்த ரேஷன் கார்டுகளின் எண்ணுடன், இணைத்து பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி முறையான ஆவணங்கள் இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகள், போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பெருமாள்கோவில்பட்டியிலுள்ள பொதுமக்களின் ரேஷன்கார்டுகள் செல்லாது என்றும் அவற்றிற்கு அரிசி, சீனி போன்ற பொருட்கள் வழங்க முடியாது என்றும் ரேஷன்கடை ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேரையூர்–உசிலம்பட்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பால்ராஜ், வையத்துரை ஆகியோர் கூறுகையில், அனைத்து ஆவணங்களையும் நாங்கள் முறையாக கொடுத்துள்ளோம். ஆனால் அது சரிவர ஆன்லைனில் பதிவேற்றப்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்கமுடியாது, என ரேஷன் கடை ஊழியர் கூறுகிறார். இதுபற்றி பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டும், அவர் முறையான பதில் சொல்லவில்லை.

மேலும் எங்கள் கார்டுகளுக்கு அரிசி கேட்டபோது, எங்களது ரேஷன்கார்டுகள் செல்லாது என்றும், பொருட்கள் வழங்க முடியாது என்றும் கூறினார். இதனால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

தகவலறிந்து வந்த சேடபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் போலீசார், முன்னாள் ஒன்றியத் தலைவர் பால்பாண்டி, ரேஷன்கடை ஊழியர்கள் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து உசிலம்பட்டி வட்ட வழங்கல் அதிகாரி பிரபாகரன் கூறியதாவது:– பொதுமக்கள் அவரவர் ரேஷன் கார்டுகளில் இணைக்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால், அதை செல்லாது என்று கூற முடியாது. இந்த பிரச்சினை பற்றி இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது போலியான கார்டுகள், 2 முறை பதிவுபெற்ற கார்டுகள், கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

தகுதி உள்ள அனைவருக்கும், அனைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும் என்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. ரேஷன்கடை ஊழியர்களும் முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் உண்டு என்று கூறி வருகின்றனர். ரேஷன் கார்டுகள் சம்பந்தமாக முழுத்தகவல்களையும், தாசில்தார் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்