தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட

Update: 2016-12-26 22:30 GMT

கிருஷ்ணகிரி,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

போராட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி முன்னிலை வகித்தார்.

தளி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளருமான டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை கொடுக்க வேண்டும்.

சம்பள பாக்கி வழங்க வேண்டும்

அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 400 என கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தையும், இடதுபுற கால்வாய் திட்டத்தையும் செயல்படுத்த பணியை உடனடியாக தொடங்க வேண்டும். காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகளால் தொடர்ந்து விவசாயிகளின் விளைபொருட்கள் நாசமாகிறது. இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நரசிம்மன், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் லலிதா, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர்கள் சிவராஜி, ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் மாதர் சங்க தலைவர் சுபத்திரா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஹரிஹரன், விவசாய சங்க மாநில குழு மங்கம்மா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெருமாள், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்