கோப்பேரிமடம் முதல் சித்தார்கோட்டை வரை சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கோப்பேரிமடம் முதல் சித்தார்கோட்டை வரை சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோப்பேரிமடம் சாலை ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம் முதல் அழகன்குளம் வரையிலான சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக க

Update: 2016-12-26 22:45 GMT

பனைக்குளம்,

கோப்பேரிமடம் முதல் சித்தார்கோட்டை வரை சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோப்பேரிமடம் சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம் முதல் அழகன்குளம் வரையிலான சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்றுவர மிகவும் அவதிப்பட்டு வந்தன. மேலும் இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பிரதான சாலையாக உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து அந்தபகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் இந்த சாலை கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையாக சமீபத்தில் தரமாக அமைக்கப்பட்டுஉள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

கோப்பேரிமடம் முதல் சித்தார்கோட்டை வரையிலான சாலையின் இருபுறமும் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்களின் தரைமட்டத்துக்கு மேல் சுமார் 10 அடி உயரத்திற்கு மணல் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டுஉள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் ராட்சத பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. இந்த சாலை புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் தேவிபட்டினம் வழியாக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோப்பேரிமடம், பனைக்குளம் வழியாக ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை எளிதில் அடைந்து விடுகின்றனர்.

மண் அரிப்பு

இந்த நிலையில் மழை பெய்யும் சமயங்களில் கோப்பேரிமடம் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையும் நிலை உருவாகி உள்ளது. இது தொடர்ந்தால் புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை விரைவில் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கோப்பேரிமடம் முதல் சித்தார்கோட்டை வரை இந்த சாலையின் இருபுறங்களிலும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்