திருடி விட்டு தப்பிச்சென்ற போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆலந்தூரில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு தப்பிச்சென்ற போது சாலையில் ‘ஸ்டாண்டை’ உரசியபடி வேகமாக சென்றதால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2016-12-25 21:44 GMT

ஆலந்தூர்,

ஆலந்தூரில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு தப்பிச்சென்ற போது சாலையில் ‘ஸ்டாண்டை’ உரசியபடி வேகமாக சென்றதால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்தவர் ஷாம் பிரவீன்குமார் (வயது 20). இவர், பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஆலந்தூர் தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார். டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்

இதுபற்றி பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். மோட்டார் சைக்கிள் திருட்டு போன இடம் பரங்கிமலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி பரங்கிமலை போலீசில் ஷாம் பிரவீன்குமார் புகார் செய்தார்.

அதன்பேரில் பரங்கிமலை போலீசார் திருட்டு மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க, அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து, அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த பதிவு எண்ணை வைத்து மோட்டார் சைக்கிளை போலீசார் தேடி வந்தனர்.

தீப்பிடித்து எரிந்தது

இந்த நிலையில் கிண்டி ராஜ்பவன் அருகே சர்தார் பட்டேல் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளின் ‘ஸ்டாண்டை’ தட்டிவிட்டு சாலையில் உரசியபடி நெருப்பை வரவழைத்துக்கொண்டு வேகமாக சென்றனர்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அங்கிருந்த போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் பயந்து போன 3 பேரும் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

தீயில் எரிந்து நாசம்

போலீசார் அந்த வழியாக சென்ற ஒரு தண்ணீர் லாரியை நிறுத்தி, அதில் இருந்த தண்ணீரை கொண்டு மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் மோட்டார் சைக்கிளின் இருக்கை உள்பட பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமானது.

பின்னர் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை பார்த்தபோது அது ஆலந்தூரில் திருட்டு போன கல்லூரி மாணவர் ஷாம் பிரவீன்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதுபற்றி பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எரிந்து போன மோட்டார் சைக்கிளை கைப்பற்றினார்கள்.

மோட்டார் சைக்கிள் பந்தயம்

மர்மநபர்கள் 3 பேரும் ஆலந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பிச்செல்லும் போது சாலையில் ‘ஸ்டாண்டை’ உரசியபடி வேகமாக சென்றதால் ஏற்பட்ட தீப்பொறியால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் கிண்டி, தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து பெசன்ட் நகர் வரை நள்ளிரவு நேரங்களில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக மர்மநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றபோது இந்த தீ விபத்து நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்