பணப்பிரச்சினை 30 நாட்களில் முழுமையாக தீரும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

பணப்பிரச்சினை 30 நாட்களில் முழுமையாக தீரும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்தார். ஆராதனை விழா காஞ்சீபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந

Update: 2016-12-25 22:30 GMT

காஞ்சீபுரம்

பணப்பிரச்சினை 30 நாட்களில் முழுமையாக தீரும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்தார்.

ஆராதனை விழா

காஞ்சீபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு மகா பெரியவர் சன்னிதானத்தில் வணங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காஞ்சீபுரம் மகா பெரியவரின் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு மகா பெரியவரின் ஆசி பெறவும், சங்கராச்சாரியர்களின் ஆசி பெறவும் நான் காஞ்சீபுரம் வந்துள்ளேன்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை காங்கிரஸ்–தி.மு.க. இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காளையை காட்சி பொருளாக்குவதாக பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு பிரச்சினையை உருவாக்கியது. ஆனால் கடந்த ஆண்டு அரசு சட்டத்தின் மூலமாக நடத்தவேண்டும் என்று அரசாணை கொண்டு வந்தோம்.

இப்போது இந்த அரசாணையை எதிர்த்து ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது.

கருப்பு பணம் ஒழிப்பு

கருப்பு பணத்தை ஒழிக்கும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். இதுவரை 5½ லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 லட்சம் கோடி கொண்டு வந்தால் போதும். 30 நாட்களில் பணப்பிரச்சினை முழுமையாக தீர்ந்து விடும். அ.தி.மு.க.வில் யாரை பொதுச்செயலாளராக கொண்டு வரவேண்டும் என்பது அவர்களுடைய உள்கட்சி விஷயம். அதில் பா.ஜ.க. சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரி துறை சோதனை முழுக்க முழுக்க ஊழல் சம்பந்தமானது. அதேவேளையில் தமிழ்நாட்டில் 18 லட்சம் அரசு அலுவலர்களின் தலைவராக இருந்த தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்தது துரதிர்ஷ்டவசமானது. மேலும் அவரிடம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சட்ட விரோதமாக மூலதனங்கள் உள்ளது என தகவல்கள் வருகிறது. இதில் சட்டம் தன் கடமையை செய்யும்.

தாமரையால் நிமிர்ந்தோம்

கர்நாடக அரசு 1970–ம் ஆண்டில் இருந்து அணைகளை கட்டி வருகிறது. 1967–ம் ஆண்டு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளுக்கு தொல்லைதான். 1970–ம் ஆண்டு சட்ட மன்றத்திலேயே கர்நாடக அரசு அணை கட்டுவது சரிதான் என்று சொன்னவர் கருணாநிதி. தமிழ்நாட்டுக்காகவும், தமிழனுக்காகவும், தமிழுக்காகவும் எதுவுமே செய்யாத ஒரு கும்பல் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்கிறது. அதனால் மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். திராவிடத்தால் விழுந்தோம், தாமரையால் நிமிர்ந்தோம் என மக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்